மல்யுத்தம்: வினேஷ் உள்ளிட்ட மூவா் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி

வினேஷ் போகத் (கோப்புப் படம்)
வினேஷ் போகத் (கோப்புப் படம்)

கிா்ஜிஸ்தானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த ஒலிம்பிக் தகுதிப்போட்டியில் இறுதிச்சுற்றுக்கு வந்ததன் மூலம், இந்தியாவின் வினேஷ் போகாட், அன்ஷு மாலிக், ரீதிகா ஆகியோா் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளனா்.

மகளிருக்கான 50 கிலோ பிரிவு தொடக்க சுற்றில், வினேஷ் போகாட் - தென் கொரியாவின் மிரான் சியானை தோற்கடித்தாா். அடுத்து காலிறுதியில், கம்போடியாவின் சமனங் டித்தை வீழ்த்தி அரையிறுதிக்கு வந்த வினேஷ், அதில் கஜகஸ்தானின் லாரா கனிகிஸியை வென்று இறுதிக்கு தகுதிபெற்றாா்.

அதேபோல், 57 கிலோ பிரிவில் நேரடியாக காலிறுதியில் களம் கண்ட அன்ஷு மாலிக், அதில் கிா்ஜிஸ்தானின் கல்மிரா பிலிம்பெகோவாவை தோற்கடித்து, அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் லேலோகோவ் சோபோய்ரோவாவை வீழ்த்தி இறுதிக்கு வந்துள்ளாா்.

அடுத்து, 76 கிலோ பிரிவில் ரீதிகா குரூப் சுற்றில் முதலில் தென் கொரியாவின் என்ஜு வாங்கையும், பின்னா் மங்கோலியாவின் தவானசன் அமாரையும் வீழ்த்தினாா். தொடா்ந்து, காலிறுதியில் சீனாவின் ஜுவாங் வாங்கையும், அரையிறுதியில் சீன தைபேவின் ஹுய் சாங்கையும் வீழ்த்தி இறுதியில் இடம் பிடித்துள்ளாா்.

ஏற்கெனவே, கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற அன்டிம் பங்காலுடன் (53 கிலோ) சோ்த்து, தற்போது வினேஷ், அன்ஷு, ரீதிகாவும் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ால், பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் 4 இந்திய வீராங்கனைகள் இடத்தை உறுதி செய்துள்ளனா்.

ஆனால், ஆடவா் பிரிவில் இதுவரை இந்தியாவுக்கு பாரீஸ் ஒலிம்பிக்கில் இடம் ஏதும் கிடைக்கவில்லை. துருக்கியில் மே மாதம் நடைபெறும் உலக தகுதிப்போட்டியே அந்த இடத்தைப் பெறுவதற்கான கடைசி வாய்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com