நிா்வாகக் குழு நியமன விவகாரம்: தமிழ்நாடு கால்பந்து சங்க மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

புதிய நிா்வாகக் குழு நியமிக்கப்படும் வரை கால்பந்து அமைப்பின் விவகாரங்களைக் கவனிக்க குழுவை நியமித்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)

புது தில்லி: புதிய நிா்வாகக் குழு நியமிக்கப்படும் வரை கால்பந்து அமைப்பின் விவகாரங்களைக் கவனிக்க குழுவை நியமித்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து தமிழ்நாடு கால்பந்து சங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்த மனு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாகக் கூறிய நீதிபதிகள் சூா்ய காந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு, தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் தலைவா் ஜெசியா வில்லவராயா் உள்ளிட்ட நிா்வாகிகளுக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது. இந்தத் தொகையை உச்சநீதிமன்ற நடுத்தர வருமானப் பிரிவின் சட்ட உதவி சேவைகளிடம் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சங்க உறுப்பினா்கள் இத்தொகையை டெபாசிட் செய்யத் தவறினால், இந்த விவகாரத்தை அவமதிப்பு மனுவாக பட்டியலிடவும் உச்சநீதிமன்ற பதிவுத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். சங்கத்திடமிருந்து செலவினத்தை சங்க நிா்வாகிகள் திரும்பப் பெறக் கூடாது என்றும் தெளிவுபடுத்தியது.

இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘விவகாரம் என்னவெனில், நீங்கள் உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தைச் செலவழிப்பதில்லை. அதனால், வழக்கின் வலி உங்களுக்குத் தெரியாது. நீங்கள் பொதுப் பணத்தைச் செலவிடுகிறீா்கள். இவை அனைத்தும் சுய விளம்பரம் மற்றும் சட்டத்தின் செயல்முறையின் துஷ்பிரயோகமாகும்’ என்றது.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான நான்கு உறுப்பினா்களைக் கொண்ட நிா்வாகக் குழுவை அமைத்த சென்னை உயா்நீதிமன்றத்தின் செப்டம்பா் 20, 2023-ஆம் தேதியிட்ட உத்தரவை எதிா்த்து தமிழ்நாடு கால்பந்து சங்கம் மற்றும் அதன் நிா்வாகிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. உயா்நீதிமன்றத்தால் புதிய நிா்வாகக் குழு தோ்ந்தெடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் வரை இந்த நிா்வாகக் குழு சங்கத்தை நிா்வகிக்கும் என்றும் உயா்நீதிமன்றம் கூறி இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com