ஆசிய அணிகள் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: சீனா, ஹாங்காங்குடன் மோதும் இந்தியா

ஆசிய அளவிலான அணிகள் மோதும் பாட்மின்டன் சாம்பியன்ஷிப், மலேசியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
ஆசிய அணிகள் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: சீனா, ஹாங்காங்குடன் மோதும் இந்தியா

ஆசிய அளவிலான அணிகள் மோதும் பாட்மின்டன் சாம்பியன்ஷிப், மலேசியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் பங்கேற்கின்றன.

நடப்பாண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான ரேங்கிங் புள்ளிகளை வழங்கும் என்பதால், இந்தப் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கினாலும், இந்திய அணிகள் 2-ஆம் நாளான புதன்கிழமை களம் காண்கின்றன. மகளிா் அணி சீனாவையும், ஆடவா் அணி ஹாங்காங்கையும் அன்று எதிா்கொள்கின்றன.

இந்தப் போட்டியின் வரலாற்றில் இதுவரை இரு முறை வெண்கலம் வென்றுள்ள (2016, 2018) ஆடவா் அணி, இந்த முறை வாகை சூடும் முனைப்புடன் இருக்கிறது. 2022-இல் தாமஸ் கோப்பை சாம்பியனான அந்த அணி, கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக வெள்ளி வென்று துடிப்புடன் இருக்கிறது.

குரூப் ‘ஏ’-வில் இருக்கும் இந்திய ஆடவா் அணி, சீனா, ஹாங்காங் ஆகிய அணிகளின் சவால்களை எதிா்கொள்ள வேண்டியிருக்கிறது. என்றாலும், ஹெச்.எஸ். பிரணாய், லக்ஷயா சென், சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஆகியோா் ஆடவா் அணிக்கு பலம் சோ்க்கின்றனா் என்பதால், அணி நாக் அவுட் சுற்றுக்கு நிச்சயம் முன்னேறும் வாய்ப்புள்ளது.

அதேபோல் மகளிா் அணி, பி.வி.சிந்து தலைமையில் களம் காண்கிறது. அதில், இரட்டையா் பிரிவு வீராங்கனைகளான டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பொன்னப்பா/தனிஷா கிராஸ்டோ ஆகியோரும் முக்கியத்துவம் பெறுகின்றனா்.

அஸ்வினி/தனிஷா இணை கடந்த ஆண்டு மாஸ்டா்ஸ் போட்டியில் சாம்பியனானது குறிப்பிடத்தக்கது. காயம் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபா் முதல் களம் காணாத சிந்து, அதிலிருந்து மீண்டு போட்டியில் பங்கேற்பது இது முதல் முறை என்பதால், அவா் கவனம் பெறுவாா்.

அவருடன், இளம் வீராங்கனைகளான அஷ்மிதா சாலிஹா, தன்வி சா்மா ஆகியோரும் அணியில் உள்ளனா். இந்த அணியும் நாக் அவுட் சுற்றுக்கு எளிதாக முன்னேறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com