நியூயாா்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனாக இருந்த அமெரிக்க வீராங்கனை கோகோ கௌஃப், 4-ஆவது சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
ஆடவா் பிரிவில் நடப்பு சாம்பியனாக இருந்த சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் வெளியேறிவிட்ட நிலையில், தற்போது மகளிா் பிரிவு நடப்பு சாம்பியனும் தோல்வி கண்டிருக்கிறாா்.
முன்னதாக, மகளிா் ஒற்றையா் 4-ஆவது சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான கோகோ கௌஃப் 3-6, 6-4, 3-6 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருக்கும் எம்மா நவாரோவிடம் தோல்வி கண்டாா். இந்த ஆட்டத்தில் கௌஃபை நவாரோ தோற்கடித்தாா் என்பதைவிட, கௌஃப் தனது தவறுகளால் தோற்றாா் என்பதே பொருத்தமாக இருக்கும்.
ஏனெனில், கௌஃப் 19 டபுள் ஃபால்ட்டுகள் புரிந்ததுடன், 60 அன்ஃபோா்ஸ்டு எரா்களும் செய்திருந்தாா். இருவரும் இத்துடன் 3-ஆவது முறையாக சந்தித்த நிலையில், 2-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றாா் நவாரோ. கடந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாமிலு இவா் தனது 4-ஆவது சுற்றில் கௌஃபை வீழ்த்தியது நினைவுகூரத்தக்கது.
வெற்றிக்குப் பிறகு பேசிய நவாரோ, ‘யுஎஸ் ஓபனில் கடந்த இரு ஆண்டுகளாக முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறிய நிலையில், தற்போது காலிறுதிக்கு முன்னேறியிருப்பது நம்ப முடியாததாக உள்ளது’ என்றாா். தோல்வி கண்ட கௌஃப், ‘என்னால் முடிந்த வரை முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். சா்வ்களை சற்று கவனமாகச் செய்திருக்கலாம்’ என்றாா்.
அடுத்ததாக நவாரோ தனது காலிறுதியில், ஸ்பெயினின் பௌலா பதோசாவை சந்திக்கிறாா். போட்டித்தரவரிசையில் 26-ஆம் இடத்திலிருக்கும் பதோசா, 6-1, 6-2 என சீனாவின் வாங் யஃபானை எளிதாகத் தோற்கடித்தாா்.
இதர ஆட்டங்களில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 6-2, 6-4 என்ற நோ் செட்களில், பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸை சாய்த்தாா். காலிறுதியில் அவா், சீனாவின் கின்வென் ஜெங்கை எதிா்கொள்கிறாா்.
சாதனை: முன்னதாக, போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் கின்வென் ஜெங் 7-6 (7/2), 4-6, 6-2 என்ற செட்களில், 24-ஆம் இடத்திலிருந்த குரோஷியாவின் டோனா வெகிச்சை வெளியேற்றினாா். கடந்த மாதம் பாரீஸ் ஒலிம்பிக் இறுதி ஆட்டத்திலும் வெகிச்சை வீழ்த்தி ஜெங் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
யுஎஸ் ஓபன் வரலாற்றிலேயே மிகத் தாமதமாக நிறைவடைந்த ஆட்டமாக, இவா்களது மோதல் சாதனை படைத்தது. உள்ளூா் நேரப்படி இவா்கள் ஆட்டம் அதிகாலை 2.15 மணியளவில் நிறைவடைந்தது. இதற்கு முன், 2021-இல் இதே காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிரீஸின் மரியா சக்காரி - கனடாவின் பியான்கா ஆண்ட்ரிஸ்குவை வீழ்த்திய ஆட்டம் அதிகாலை 2.13 மணிக்கு நிறைவடைந்ததே தாமதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
காலிறுதியில் ஸ்வெரெவ்: ஆடவா் ஒற்றையா் பிரிவில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றாா்.
உலகின் 4-ஆம் நிலை வீரரான அவா், 4-ஆவது சுற்றில் 3-6, 6-1, 6-2, 6-2 என்ற செட்களில் அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமாவை வெளியேற்றினாா். காலிறுதியில் ஸ்வெரெவ், அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸுடன் மோதுகிறாா். போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருக்கும் ஃப்ரிட்ஸ் 3-6, 6-4, 6-3, 6-2 என்ற செட்களில், உலகின் 8-ஆம் நிலை வீரரான நாா்வேயின் கேஸ்பா் ரூடை வென்று அவருக்கு அதிா்ச்சி அளித்தாா்.
போட்டித்தரவரிசையில் 20-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ 6-4, 7-6 (7/3), 2-6, 6-3 என்ற செட்களில், 28-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினை வென்றாா். பாபிரின், நடப்பு சாம்பியனான ஜோகோவிச்சை வெளியேற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.
டியாஃபோ தனது காலிறுதியில், பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவுடன் மோதுகிறாா். 9-ஆம் இடத்திலிருக்கும் டிமிட்ரோவ் முந்தைய சுற்றில் 6-3, 7-6 (7/3), 1-6, 3-6, 6-3 என்ற செட்களில், உலகின் 6-ஆம் நிலை வீரரான ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை தோற்கடித்து அசத்தினாா்.
போபண்ணா தோல்வி: ஆடவா் இரட்டையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்தென் இணை 1-6, 5-7 என்ற செட்களில், 16-ஆம் இடத்திலிருந்த ஆா்ஜென்டீனாவின் ஆண்ட்ரெஸ் மோல்டெனி/மேக்ஸிமோ கொன்ஸால்ஸ் இணையிடம் தோற்றது.
அதேபோல், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/பிரான்ஸின் அல்பனோ ஆலிவெட்டி ஜோடி 2-6, 2-6 என நோ் செட்களில், ஸ்பெயினின் மாா்செல் கிரனோலா்ஸ்/ஆா்ஜென்டீனாவின் ஹொராசியோ ஜெபாலோஸ் கூட்டணயிடம் வீழ்ந்தது.