பிஃபா உலகக் கோப்பைத் தொடரில் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் பங்கேற்று விளையாடவுள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிஃபா உலகக் கோப்பைத் தொடர் இந்தாண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், 48 அணிகள் பங்கேற்று 16 நகர்களில் 104 போட்டிகள் நடைபெறுகின்றன.
23-வது கால்பந்து தொடர் வருகிற ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடரில் 12 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதில், 32 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த உலகக் கோப்பையில் புதியதாக 891 வீரர்களும் கடந்த உலகக் கோப்பையில் விளையாடியவர்கள் 357 பேரும் பங்கேற்றுள்ளனர். அவர்களில் நட்சத்திர வீரர்கள் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கில்யெர்மோ ஓச்சோவா ஆகியோர் ஆறாவது உலகக் கோப்பையில் விளையாடவுள்ளனர்.
இந்த நிலையில், பிஃபா உலகக் கோப்பைத் தொடரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்ட தாஹ்சின் ஜம்ஷித், கத்தார் அணியிலும், பஞ்சாபை பூர்விகமாகக் கொண்ட சிங் குடும்பத்தைச் சேர்ந்த சர்ப்ரீத் சிங், நியூசிலாந்து அணியிலும் இடம்பெற்றுள்ளனர். ஜலந்தரை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த 27 வயதான சர்ப்ரீத், 2018 முதல் நியூசிலாந்து தேசிய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை மூன்று கோல்களையும் அடித்துள்ளார்.
அதேபோன்று, பிஃபா உலகக்கோப்பை வரலாற்றில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நிஷான் வேலுப்பிள்ளை ஆஸ்திரேலிய அணியிலும், சாமுவேல் முத்துசாமி, காங்கோ அணியிலும் விளையாட உள்ளனர்.
காங்கோ ஜனநாயகக் குடியரசு அணியில் இடம் பெற்றுள்ள சாமுவேல் முத்துசாமி தந்தை தமிழர் வம்சாவளியைக் கொண்ட இந்தோ-குவாடலூபியன். அவரது தாய் காங்கோவைச் சேர்ந்தவர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிறந்த சாமுவேல் முத்துசாமி, 2019-இல் காங்கோ தேசிய அணிக்காக அறிமுகமானார்.
ஆஸ்திரேலிய அணியில் விளையாடி வரும் நிஷான், மெல்பர்ன் விங்கர் என்றும் அழைக்கப்படுகிறார். அவரது தாய் ஆங்கிலோ-இந்தியர்; இவரின் தந்தை மலேசியத் தமிழர்.
ஆந்திரத்திலிருந்து மொரீஷியஸுக்கு குடிபெயர்ந்தவரான விகாஷ் தோராசூ, 2006 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.
அவருக்குப் பிறகு, உலகக் கோப்பையில் 4 இந்திய வம்சாவளியைக் கொண்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கிரிக்கெட் உலகில் கொடிக்கட்டி பறந்துவரும் இந்தியா, கால்பந்து உலகில் பெரும் போராட்டத்தையும் சவால்களையும் சந்தித்து வருகிறது. பிஃபா உலகக் கோப்பைத் தொடருக்கு இந்திய அணி தேர்வாகாத நிலையில், இந்திய வம்சாவளி வீரர்கள் உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary
The 2026 FIFA World Cup, being hosted by the United States, Canada, and Mexico, will feature four players of Indian origin — Sarpreet Singh, Samuel Muthusamy, Nishan Velupillai, and Tahseen Mohammed Jamsheed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

891 புதிய வீரர்களுடன் முதல்முறையாக 1,248 பேர் பங்கேற்கும் கால்பந்து உலகக் கோப்பை!
பிஃபா உலகக்கோப்பை! கத்தார் அணியில் விளையாடும் 19 வயதான கேரள வம்சாவளி வீரர்!

நட்சத்திர வீரர்கள் நிரம்பிய பிரான்ஸ் அணி..! கால்பந்து உலகக் கோப்பைக்குத் தயார்!







