சதமடித்த பூரான் போராட்டம் வீண்: இலங்கை வெற்றி
By DIN | Published On : 01st July 2019 11:45 PM | Last Updated : 01st July 2019 11:45 PM | அ+அ அ- |

நன்றி: டிவிட்டர்/ஐசிசி
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பூரான் சதமடித்தபோதிலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஹோல்டர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் எடுத்தது.
இலங்கை பேட்டிங்: http://bit.ly/2xmfrK9
339 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் களமிறங்கியது. அந்த அணிக்கு அம்ப்ரிஸ் மற்றும் ஹோப் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த கிறிஸ் கெயில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருடன் விளையாடி வந்த ஹெத்மயரும் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அந்த அணி 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இந்த நிலையில், நிகோலஸ் பூரானுடன் கேப்டன் ஹோல்டர் இணைந்தார். பூரனுடன் இணைந்து சற்று நேரம் தாக்குப்பிடித்த ஹோல்டர் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தபோதும், பூரன் அரைசதம் அடித்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்து விக்கெட்டை பாதுகாத்து விளையாடி வந்த பிராத்வைட் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க பூரனுக்கு நெருக்கடி மேலும் அதிகரித்தது.
பிராத்வைட் ஆட்டமிழந்தபோது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வெற்றிக்கு 96 பந்துகளில் 140 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில், ஆலென் களமிறங்கினார். பூரானுடன் இணைந்து ஆலெனும் துரிதமாக விளையாட அந்த அணியின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 10 என்ற நிலையிலேயே இருந்து வந்தது. இது இலங்கை அணியை மிகுந்த நெருக்கடிக்குள்ளாக்கியது. பூரானும் சதத்தை நெருங்கினார். ஆலெனும் 30 பந்திலேயே அரைசதத்தை எட்டினார்.
ஆட்டத்தின் மிக முக்கியமான இந்த கட்டத்தில், 51 ரன்கள் எடுத்திருந்த ஆலென் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இது திருப்புமுனை ஏற்படுத்தியது.
இதன்பிறகு, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது முதல் சதமடித்த பூரான் இலக்கை நோக்கி விளையாடி வந்தார். அந்த அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 31 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பந்துவீசாத மேத்யூஸ் பந்துவீச அழைக்கப்பட்டார். எனினும், அவர் தனது முதல் பந்திலேயே பூரான் விக்கெட்டை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் நம்பிக்கையை சிதைத்தார். பூரான் 103 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 118 ரன்கள் எடுத்தார்.
அதன்பிறகு, மேற்கிந்தியத் தீவுகள் டெய்லண்டர்களால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை.
மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணித் தரப்பில் மலிங்கா 3 விக்கெட்டுகளையும், ரஜிதா, வாண்டர்சே மற்றும் மேத்யூஸ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஹெத்யமர், பிராத்வைட் மற்றும் ஆலென் ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை ரன் அவுட் மூலம் இழந்தது குறிப்பிடத்தக்கது.