ரோஹித் சதம், ராகுல் அரை சதம்: வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா ரன்கள் குவிப்பு!

இந்தச் சதத்தின் மூலம் ரோஹித் சர்மா புதிய சாதனையைப் படைத்துள்ளார். 2019 உலகக் கோப்பைப் போட்டியில்...
ரோஹித் சதம், ராகுல் அரை சதம்: வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா ரன்கள் குவிப்பு!

6 ஆட்டங்களில் 5 வெற்றிகளைப் பெற்று, தோல்வியே அடையாத அணியாக இருந்த இந்தியா, ஞாயிற்றுக்கிழமை பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் அதே மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக இன்று விளையாடி வருகிறது. 

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் குல்தீப் யாதவ், ஜாதவுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். வங்கதேச அணியில் மெஹிடி சஹன், மஹ்முதுல்லா ஆகியோருக்குப் பதிலாக ருபெல் ஹூசைன், சபி ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இங்கிலாந்துக்கு எதிராக ரன்கள் குவிக்கச் சிரமப்பட்ட இந்தியத் தொடக்க வீரர்கள் இன்று ஆரம்பம் முதலே விரைவாக ரன்கள் எடுத்தார்கள். ஆரம்பத்தில் ரோஹித்துக்கு ஓர் அதிர்ஷ்டம் கிடைத்தது. 9 ரன்களில் இருந்தபோது அவர் அளித்த கேட்சைத் தவறவிட்டார் தமிம். இதனால் பெரிய சிக்கலில் இருந்து தப்பித்தார் ரோஹித். இதன்பிறகு அவருடைய ஆட்டத்தைத் தடுத்த நிறுத்தமுடியவில்லை. முதல் 10 ஓவர்களில் இந்திய அணிக்கு விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் கிடைத்தன. ராகுல் வழக்கம்போல நிதானமாக விளையாடினாலும் இந்தமுறை அதிகப் பந்துகளை வீணடிக்காமல் ஆடினார். 

45 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ரோஹித் சர்மா. 18-வது ஓவரில் இந்தக் கூட்டணி 100 ரன்களை எட்டியது. 57 பந்துகளில் அரை சதமெடுத்தார் ராகுல். 75 ரன்களில் இருந்தபோது ஒரு பவுண்டரி அடித்து 2019 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 520 ரன்களுடன் முதலிடம் பிடித்தார் ரோஹித் சர்மா. மேலும் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் தோனியைப் பின்னுக்குத் தள்ளி 230 சிக்ஸர்களுடன் முதலிடம் பிடித்தார் ரோஹித் சர்மா. இதுதவிர ரோஹித் - ராகுல் கூட்டணி 164 ரன்கள் எடுத்தபோது இந்த உலகக் கோப்பையில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த வீரர்கள் என்கிற பெருமையையும் பெற்றார்கள். 

29 ஓவரின் முடிவில் ரோஹித் சர்மா சதத்தைப் பூர்த்தி செய்தார். 90 பந்துகளில் அவர் இந்த இலக்கை எட்டினார். 

இந்தச் சதத்தின் மூலம் ரோஹித் சர்மா புதிய சாதனையைப் படைத்துள்ளார். 2019 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் எடுத்துள்ள 4-வது சதம் இது. இதன்மூலம் ஓர் உலகக் கோப்பைப் போட்டியில் அதிகச் சதங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மாவும் இணைந்துள்ளார். 2015 உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை வீரர் சங்கக்காரா 4 சதங்கள் எடுத்தார். இப்போது ரோஹித்தும் 4 சதங்களுடன் சாதனை படைத்துள்ளார்.

சதமடித்தவுடன் இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு மீண்டும் ரோஹித் சர்மா 200 ரன்கள் அடிக்கவேண்டும் என்பதாக இருந்தது. ஆனால் இந்தமுறை 104 ரன்களுடன் ஆட்டமிழந்தார் ரோஹித். சில ஓவர்கள் கழித்து, 92 பந்துகளில் 77 ரன்களில் எடுத்த ராகுல், ருபெல் ஹூசைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நான்காவது வீரராகக் களமிறங்கினார் ரிஷப் பந்த். இதன்பிறகு கோலியும் ரிஷப் பந்தும் விரைவாக ரன்கள் எடுத்தார்கள். 

எனினும் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து அரை சதங்கள் எடுத்த கோலி, இன்று சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து, 26 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். இதன்பிறகு பாண்டியா களமிறங்கினார். பாண்டியா - ரிஷப் பந்த் ஜோடி அதிரடியாக விளையாடும் என எதிர்பார்த்த நிலையில், டக் அவுட் ஆனார் பாண்டியா. கோலி, பாண்டியா ஆகிய இரு முக்கியமான விக்கெட்டுகளை ஒரே ஓவரில் எடுத்தார் முஸ்தாஃபிசுர் ரஹ்மான். 

இந்திய அணி 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்களுடன் விளையாடி வருகிறது. ரிஷப் பந்த் 36 ரன்களுடனும் தோனி 1 ரன்னுடனும் களத்தில் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com