இமாம் உல் ஹக் 100, பாபர் அஸாம் 96: வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் ரன்கள் குவிப்பு!

ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார்...
இமாம் உல் ஹக் 100, பாபர் அஸாம் 96: வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் ரன்கள் குவிப்பு!

பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும். இதனால் டாஸ் நிகழ்வு மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது.

பாகிஸ்தான் ரசிகர்களின் விருப்பத்தின்படி டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. வங்கதேச அணியில் மஹ்முதுல்லா, மெஹிடி இடம்பெற்றுள்ளார்கள். 

316 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், நியூஸிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும். ஆனால், ஆரம்பம் முதலே பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தெளிவாக இருந்தார்கள். 500 ரன்களுக்கு அடிக்க ஆசைப்பட்டுத் தோற்பதை விடவும் 300-க்கு முயற்சி செய்து பொறுப்புடன் விளையாடி, வெற்றிக்கு முயல்வோம் என்பதாக இருந்தது அவர்களுடைய முயற்சி. ஃபகார் ஸமான் இந்தமுறையும் ஏமாற்றினார். 13 ரன்களில் சைஃபுத்தீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான். பாபர் அஸாமும் இமாம் உல் ஹக்கும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார்கள். 25-வது ஓவரின் முடிவில் ஸ்கோர் 115 ரன்களாக உயர்ந்தது.

ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரராக இருந்தார், ஜாவாத் மியாண்டட். 1992-ல் அவர் 437 ரன்கள் எடுத்தார். எனினும் அந்த இலக்கை இன்று 59 ரன்கள் எடுத்தபோது தாண்டினார் பாபர் அஸாம். இதன்மூலம் ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார். பாபர் அஸாம் 62 பந்துகளிலும் இமாம் உல் ஹக் 52 பந்துகளிலும் அரை சதங்களை எட்டினார்கள்.

சிறப்பாக ஆடிய பாபர் அஸாம், சதமெடுக்கும் நிலையை நெருங்கியபோது ஆட்டமிழந்தார். 96 ரன்களில் சைஃபுத்தீன் பந்துவீச்சில் வீழ்ந்தார். எனினும் இமாம் உல் ஹக் பதற்றமின்றி விளையாடி 99 பந்துகளில் சதமடித்தார். ஆனால் அதே ஓவரில் முஸ்தாஃபிசுர் பந்துவீச்சில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். 

42 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது பாகிஸ்தான் அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com