ஸ்டீவ் ஸ்மித் மட்டும் அரைசதம்: 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நன்றி: டிவிட்டர்/ஐசிசி
நன்றி: டிவிட்டர்/ஐசிசி


இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 

நடப்பு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு தொடர்ந்து சிறப்பான தொடக்கத்தை அளித்து வந்த வார்னர் மற்றும் ஃபின்ச் இந்த முறை சொதப்பினர். ஃபின்ச் முதல் பந்திலேயே ஆர்ச்சர் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, வார்னர் 9 ரன்களுக்கு வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். உலகக் கோப்பையில் முதன்முதலாக களமிறங்கிய ஹேண்ட்ஸ்கோம்ப் 4 ரன்களுக்கு வோக்ஸ் வேகத்தில் வீழ்ந்தார். இதனால், அந்த அணி 14 ரன்களுக்குள் 3 முக்கியமான விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

இதன்பிறகு, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி அந்த அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த இணை விக்கெட்டுகளை பாதுகாத்து நிதானமாக விளையாடியது. 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 100 ரன்களைக் கடந்து நம்பிக்கையளித்து வந்தனர். ஸ்டீவ் ஸ்மித்தும் அரைசதம் அடித்தார்.  

இந்த நிலையில், அடில் ரஷித் பந்தை தூக்கி அடித்து கேரி ஆட்டமிழந்தார். அவர் 46 ரன்கள் சேர்த்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்டாய்னிஸ் அதே ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் என்பதால் ஆஸ்திரேலிய அணி மீண்டும் நெருக்கடிக்குள்ளானது. 

அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் வழக்கமான பாணியில் சற்று துரிதமாக ரன் சேர்த்தார். ஆனால், அவரும் ஆர்ச்சர் பந்தில் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கம்மின்ஸும் வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்மூலம், அந்த அணி மீண்டும் நெருக்கடிக்குள்ளானது. 

இதையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் பாட்னர்ஷிப் அமைத்து அந்த அணியை 200 ரன்களைக் கடக்கச் செய்தனர். இந்த இணை 8-வது விக்கெட்டுக்கு நல்ல வேகத்தில் 51 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களுக்கு 48-வது ஓவரில் ரன் அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே ஸ்டார்க் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு, பெஹரன்டோர்ஃப் 1 ரன்னுக்கு கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் முடிவில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் மற்றும் ரஷித் தலா 3 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளையும், வுட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com