27 வருடங்களுக்குப் பிறகு இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இங்கிலாந்து: அரையிறுதியில் ஆஸி., தோல்வி

ஆஸ்திரேலியாவுடனான அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட்
நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட்


ஆஸ்திரேலியாவுடனான அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 49 ஓவர்கள் முடிவில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

ஆஸ்திரேலியா பேட்டிங்: http://bit.ly/2XVPuzT

224 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். இந்த இணை சேஸிங்குக்கு நல்ல அடித்தளம் அமைக்கும் வகையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து பெரிதளவில் ஸ்விங் ஆகவில்லை. எனவே, சூழ்நிலை உணர்ந்து வெற்றிக்கு தேவையான ரன் ரேட் குறைவு என்பதையும் உணர்ந்து முதல் 10 ஓவரில் 50 ரன்கள் சேர்த்து அடித்தளத்தை அமைத்தனர்.

இதன்பிறகு, ஜேசன் ராய் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்துக்கு மாறினார். ரன்கள் மளமளவென உயர்ந்தது. ஆஸ்திரேலியாவின் முக்கியமான பந்துவீச்சாளரான ஸ்டார்க் ஓவரிலேயே அதிரடியாக ரன் குவிக்க அந்த அணி செய்வதறியாது திணறியது. இதன்மூலம், ஜேசன் ராயும் தனது அரைசதத்தை அடித்தார். 

வழக்கமான பந்துவீச்சாளர்கள் மூலம் எந்த பலனும் கிடைக்காத நிலையில், ஸ்டீவ் ஸ்மித்தை பந்துவீச அழைத்தார் ஃபின்ச். ராய் அந்த ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடிக்க, அந்த ஒரு ஓவரில் மட்டும் இங்கிலாந்துக்கு 21 ரன்கள் கிடைத்தது. இதன்மூலம், இந்த இணையும் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்தது. இதனால், ஆஸ்திரேலிய உளவியல் ரீதியாக மிகப் பெரிய பின்னடைவில் இருந்தது. 

இந்த நிலையில், பேர்ஸ்டோவ் 34 ரன்களுக்கு ஸ்டார்க் வேகத்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராய் நடுவரின் தவறான முடிவால் ஆட்டமிழந்தார். அவர் 65 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 85 ரன்கள் எடுத்தார். 

அதன்பிறகு, புதிதாக களமிறங்கிய ஜோ ரூட் மற்றும் கேப்டன் இயான் மார்கனுக்கு நெருக்கடியளிக்க ஆஸ்திரேலியா முயற்சித்தது. ஆனால், சிறிது நேரம் அடக்கி வாசித்த இந்த இணை அதன்பிறகு இலக்கை நோக்கி துரிதமாக விளையாடியது. 

இதன்மூலம், அந்த அணி 32.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 226 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரூட் 49 ரன்களுடனும், மார்கன் 45 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 1992-க்குப் பிறகு முதன்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com