மெளனம் கலைத்தார் ஏபி டி வில்லியர்ஸ்: சர்ச்சை குறித்து விளக்கம்!

2019 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஏபி டிவில்லியர்ஸ் முயன்றார் என்கிற அதிரடித் தகவல் கடந்த மாதம் வெளியானது...
மெளனம் கலைத்தார் ஏபி டி வில்லியர்ஸ்: சர்ச்சை குறித்து விளக்கம்!

2019 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஏபி டி வில்லியர்ஸ் முயன்றார் என்கிற அதிரடித் தகவல் கடந்த மாதம் வெளியானது.

கடந்த வருடம் மே 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்தார். 34 வயது டி வில்லியர்ஸ் தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார்.

இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியைத் தேர்வு செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு, தான் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ், பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன், தேர்வுக்குழுத் தலைவர் லிண்டா ஆகியோரிடம் தெரிவித்துள்ளார் டி வில்லியர்ஸ். ஆனால் இது சாத்தியமில்லை என்று உடனடியாக டி வில்லியர்ஸுக்குத் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்த செய்தி, உலகக் கோப்பைப் போட்டி நடைபெறும் சமயத்தில் வெளியானதால், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் முடிவு குறித்துச் சமூகவலைத்தளங்களில் பலரும் விவாதித்து வருகிறார்கள். 

இந்நிலையில் தன்னைப் பற்றிய இந்த சர்ச்சைக்கு ஏபி டி வில்லியர்ஸ் விளக்கம் அளித்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

தென் ஆப்பிரிக்க அணியின் உலகக் கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதால், இதன்மூலம் அவர்களுக்குக் கவனச் சிதறல் ஏற்படாது என்பதால், என் மீதான நியாயமற்ற விமரிசனத்துக்குப் பதில் அளிக்கவுள்ளேன். 

உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, எனக்கும் கேப்டன் டு பிளெஸ்ஸிக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட உரையாடலுக்கு விளக்கமளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டேன். என்ன நடந்தது என்று கூறுகிறேன்.

என்னுடைய பணிச்சுமையைக் குறைத்துக் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதால் 2018 மே மாதம் என்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டேன். பணத்தின் காரணமாக இந்த முடிவை நான் எடுத்ததாகக் கூறினார்கள். ஆனால் அவர்கள் சொல்வது தவறு. உண்மையில் அதிக வருமானம் உடைய வாய்ப்புகள் வந்தபோதும் அதை நான் மறுத்துள்ளேன். ஒவ்வொரு வருடமும் வெளிநாடுகளில் எட்டு மாதங்கள் விளையாடியதிலிருந்து மூன்று மாதங்களாகக் குறைத்தேன். 

பிறகு எனக்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. நான் அவர்களை அழைக்கவில்லை, அவர்கள் என்னை அழைக்கவில்லை. நான் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்துவிட்டேன். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியும் பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் மற்றும் கேப்டன் டுபிளெஸ்ஸிஸ் தலைமையில் வெற்றிகளைக் கண்டது. 

இருவரும் பள்ளியில் ஒன்றாகப் படித்ததிலிருந்து நானும் டுபிளெஸ்ஸியும் நண்பர்களாக உள்ளோம். உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்படுவதற்கு இரு நாள்களுக்கு முன்பு, அவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். ஐபிஎல்-லில் ஓரளவு நன்றாக விளையாடிக்கொண்டிருந்தேன். ஒரு வருடத்துக்கு முன்பு என்னிடம் கேட்டபோது சொன்னதையே அப்போதும் மீண்டும் சொன்னேன், தேவைப்பட்டால் நான் அணிக்குள் வரத் தயார் என்றேன். தேவைப்பட்டால் மட்டும்தான் என்றேன்.

எவ்வித நிபந்தனையையும் நான் விதிக்கவில்லை. உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட தென் ஆப்பிரிக்க அணிக்குள் என்னை பலவந்தமாக நுழைக்கவில்லை. என்னைத் தேர்வு செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கவில்லை. என் பக்கமிருந்து எவ்வித புகாரும் இல்லை, அநியாயம் நடைபெற்றதாகவும் கருதவில்லை. 

ஆனால் திடீரென, இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி தோற்றபிறகு, மூன்றாவது தொடர் தோல்வியைச் சந்தித்த பிறகு, எங்களுக்குள் நடைபெற்ற தனிப்பட்ட உரையாடல் ஊடகங்களுக்குக் கசிந்தன. என்னை வில்லனாகச் சித்தரித்தன.

அந்தத் தகவல் என்னாலோ என்னைச் சேர்ந்தவர்களாலோ, டுபிளெஸ்ஸிஸாலோ வெளியே தெரிவிக்கப்படவில்லை. ஒருவேளை, உலகக் கோப்பை தோல்வி விமரிசனங்களை வேறு பக்கம் திருப்புவதற்காகச் சொல்லியிருக்கலாம். தெரியவில்லை.

இதனால் சுயநலக்காரனாக, ஆக்ரோஷமானவனாக நான் சித்தரிக்கப்பட்டுள்ளேன். ஆனால் நான் தெளிவாக உள்ளேன். நியாயமான காரணங்களுக்காக நான் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டேன். உலகக் கோப்பைப் போட்டிக்கு நான் வருவேனா என்று கேட்டதற்கு, அதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வைக்க சம்மதித்தேன். உலகக் கோப்பைப் போட்டியில் அணி நல்லவிதமாக என்னுடைய ஓய்விலிருந்து அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருந்தது. இதனால் எனக்கு யார் மீதும் கோபம் இல்லை. 

என் வாழ்க்கையின் இக்கட்டத்தில் என் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழித்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் உலகளவில் நடைபெறும் குறிப்பிட்ட சில டி20 போட்டிகளில் மட்டும் விளையாட முடிவெடுத்துள்ளேன். 

என் நாட்டுக்காக விளையாடியதைப் பெருமையாக எண்ணுகிறேன். தென் ஆப்பிரிக்க வீரர்களுடான என்னுடைய உறவு எப்போதும் வலுவாக உள்ளது. அடுத்தத் தலைமுறைக்கு உதவ எப்போதும் தயாராக உள்ளேன்.

தேவையற்ற இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தும் வேளையில், எனக்கு நட்புகளையும் வாய்ப்புகளையும் அளித்த அணிக்கும் கிரிக்கெட்டுமான என்னுடைய ஆதரவை எப்போதும் அளிப்பேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com