நியூஸிலாந்து வேகத்தில் சுருண்ட இலங்கை: 136 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
நன்றி: டிவிட்டர்/பிளாக்கேப்ஸ்
நன்றி: டிவிட்டர்/பிளாக்கேப்ஸ்


நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து, இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. கார்டிஃப்பில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

இலங்கை இன்னிங்ஸை பவுண்டரியுடன் தொடங்கிய திரிமாணே, அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய குசால் பெரேரா துரிதமாக விளையாடி ரன் சேர்த்தார். எனினும், அவர் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 29 ரன்கள் எடுத்த நிலையில் பெரேரா ஆட்டமிழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நடுவரிசை பேட்ஸ்மேன்களான குசால் மெண்டிஸ், டி சில்வா, மேத்யூஸ், ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், இலங்கை அணி 60 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

அதன்பிறகு, கேப்டன் கருணாரத்னேவுடன் திசாரா பெரேரா இணைந்தார். திசாரா பெரேரா 2 சிக்ஸர்கள் அடித்து நியூஸிலாந்து அணிக்கு நெருக்கடியளிக்க முயன்றார். ஆனால், அவரும் 27 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், சான்டனர் பந்தில் ஆட்டமிழந்தார். உடானா மற்றும் லக்மலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இந்த நிலையில், ஒருபுறம் தொடர்ந்து விக்கெட்டுகளாக சரிந்தபோதிலும், மறுமுனையில் நம்பிக்கையுடன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் கருணாரத்னே அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். ஆனால், மலிங்காவும் வெறும் 1 ரன்னுக்கு கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 

இதனால், இலங்கை அணி 29.2 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கருணாரத்னே 52 ரன்கள் எடுத்தார். 

நியூஸிலாந்து அணி சார்பில் மேட் ஹென்ரி மற்றும் லாக்கி பெர்கஸன் தலா 3 விக்கெட்டுகளையும், கிராண்ட்ஹோம், சான்ட்னர், நீஷம், போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

இலங்கை அணியில் கருணாரத்னே (52),  குசால் பெரேரா (29), திசாரா பெரேரா (27) ஆகியோர் தவிர மற்ற வீரர்கள் 10 ரன்னைக் கூட எட்டவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com