ஷாகிப், முஷ்பிகுர் அபார அரைசதம்: தென்னாப்பிரிக்காவுக்கு 331 ரன்கள் இலக்கு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்துள்ளது. 
நன்றி: டிவிட்டர்/ஐசிசி
நன்றி: டிவிட்டர்/ஐசிசி


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 5-வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால் மற்றும் சௌமியா சர்கார் களமிறங்கினர். தமிக் இக்பால் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த சர்கார் பவுண்டரிகளாக அடித்து மிரட்டினார். இதனால், வங்கதேச அணி 7-வது ஓவரிலேயே அரைசதத்தை எட்டியது. 

இந்த நிலையில் இக்பால் முதல் விக்கெட்டாக 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து, சர்காரும் சற்று நேரத்திலேயே 30 பந்துகளில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, ஷாகிப் உடன் முஷ்பிகுர் இணைந்தார். அனுபவ வீரர்களான இவர்கள் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். இருவரும் பாட்னர்ஷிப்பை கட்டமைப்பதுடன் ரன் ரேட்டையும் கவனத்தில் கொண்டு விளையாடினர். இதனால், அந்த அணி ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் குவித்து வந்தது. 

முதலில் ஷாகிப் அல் ஹசன் அரைசதம் அடித்தார். அவரைத்தொடர்ந்து, முஷ்பிகுர் ரஹீமும் அரைசதம் அடித்தார். இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் குவித்து தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடியளித்து வந்தது. இதனால், வங்கதேசம் அணி 330 ரன்களுக்கு மேல் குவிப்பதற்கான சூழல் உருவானது. 

ஆனால், இம்ரான் தாஹிர் மாற்றுத் திட்டத்தை வைத்திருந்தார். ஷாகிப் 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தாஹிர் பந்தில் போல்டானார். ஷாகிப், முஷ்பிகுர் இணை 3-வது விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது. 

தொடர்ந்து களமிறங்கிய மிதுன் சற்று துரிதமாக ரன் குவித்து வந்தார். ஆனால், அவரும் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தாஹிர் பந்திலேயே போல்டானார். இந்த 2 விக்கெட்டுகளுக்குப் பிறகு, வங்கதேசம் அணியின் ரன் குவிக்கும் வேகம் சற்று குறைந்தது. 

அதேசமயம் முஷ்பிகுர் ரஹீம் 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த சூழலில் ரஹீம் விக்கெட்டும் வங்கதேச அணிக்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியது. 

ஆனால், அனுபவ மஹ்மதுல்லா மற்றும் மொசடெக் ஹூசைன் அதிரடியாக ரன் சேர்த்தனர். வங்கதேசம் அணி 330 ரன்களுக்கு மேல் குவிக்கும் சூழல் மீண்டும் உருவானது. இதனால், வங்கதேசம் அணி 48-வது ஓவரில் 300 ரன்களை எட்டியது. இந்த நிலையில் மொசடெக் 20 பந்துகளில் 26 ரன்களுக்கு 49-வது ஓவரில் ஆட்டமிழந்தார். 

எனினும், கடைசி ஓவரில் மஹமதுல்லா சிக்ஸர் அடித்து அதிரடி காட்ட அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மஹமதுல்லா 33 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். 

தென்னாப்பிரிக்க அணி சார்பில், ஃபெலுக்வாயோ, தாஹிர், மோரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com