ஐபிஎல் ஆட்டத்தின்போது தொப்பியைத் தூக்கி வீசியது ஏன், அணியினருடன் சேராமல் தலைகவிழ்ந்தது ஏன்?: குல்தீப் யாதவ் பதில்!

என்னுடைய முதன்மையான திட்டத்தின்படி நான் பந்துவீசவில்லை என்பதால் நான் மிகவும் வருத்தமடைந்தேன்...
ஐபிஎல் ஆட்டத்தின்போது தொப்பியைத் தூக்கி வீசியது ஏன், அணியினருடன் சேராமல் தலைகவிழ்ந்தது ஏன்?: குல்தீப் யாதவ் பதில்!

2019 ஐபிஎல் போட்டி குல்தீப் யாதவுக்குச் சாதகமாக அமையவில்லை. 2017-ல் 12 ஆட்டங்களிலும் 2018-ல் 16 ஆட்டங்களிலும் விளையாடிய குல்தீப் யாதவ், இந்த வருடம் 9 ஐபிஎல் ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். அதில் 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். எகானமி - 8.66. அதிலும் ஆர்சிபி அணிக்கு எதிராக மிக மோசமாக விளையாடினார். அவருடைய கடைசி ஓவரில் மொயீன் அலி, 3 சிக்ஸர்களும் 2 பவுண்டரிகளும் அடித்தார். அந்த ஓவரில் 27 ரன்கள் கொடுத்த குல்தீப், கடைசிப் பந்தில் மொயீன் அலியின் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த ஆட்டத்தில் 4 ஓவர்களில் 1 விக்கெட் எடுத்து 59 ரன்கள் கொடுத்தார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இணைந்தார் குல்தீப்.

அந்த ஓவர் முடிந்தபிறகு கள நடுவரிடமிருந்து தொப்பையை வாங்கிய குல்தீப், கடுப்பில் அதை கீழே வீசினார். இடைவேளையின்போது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியினர் ஒன்றுகூடி திட்டம் தீட்டினார்கள். அப்போது அவர்களுடன் குல்தீப் இணைந்துகொள்ளவில்லை. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் யாரிடமுன் இணைந்துகொள்ளாமல் தனிமையில் இருந்தார் குல்தீப். பிறகு ரஸ்ஸலின் முயற்சியால் அணியினருடன் இணைந்துகொண்டார்.

ஏப்ரல் 19 அன்று ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவம், தான் வெளிப்படுத்திய உணர்வுகள் குறித்து குல்தீப் யாதவ், க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்குக் கூறியதாவது:

என் கிரிக்கெட் வாழ்க்கையில் 2019 ஐபிஎல் மிகக் கடினமானது. கடந்த இரண்டு வருடங்களில் எனக்குச் சாதகமாகவே எல்லாம் நடைபெற்றன. ஐபிஎல் போட்டியினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து வெளிவர எனக்குச் சில நாள்களாகின. 

விக்கெட்டுகள் எடுக்காதபோது உங்களுடைய தவறுகள், ரன்கள் அதிகம் கொடுப்பது போன்றவை முன்னிறுத்தப்படும். விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக எடுத்து வரும்போது யாரும் அதைப் பற்றிப் பேசமாட்டார்கள். என்னை அணியிலிருந்து நீக்கினார்கள். நான் அணியில் இடம்பெற்றிருக்கவேண்டும். ஆனால் அணியின் அமைப்பினால் எனக்கு இடம் கிடைக்கவில்லை. டி20 ஆட்டங்களில் எல்லா நேரங்களிலும் சிறப்பாக விளையாடமுடியாது. 

நான் தொப்பியை எறிந்ததற்குக் காரணம், திட்டமிட்டபடி நான் பந்துவீசவில்லை. மொயீன் அலி விளையாடியபோது நான் ரவுண்ட் தி விக்கெட்டில் பந்துவீச வேண்டும் என்று மூளை சொல்லியது. ஆனால் ஓவர் தி விக்கெட்டில் நன்றாக வீசமுடியும் என நான் எண்ணினேன். ஏனெனில் லெக் ஸ்டம்ப் பக்கமுள்ள பவுண்டரி மிக அருகில் இருந்தது. ஸ்லாட் பகுதியில் நான் பந்தை வீசினால் அவர் நிச்சயம் சிக்ஸ் அடித்துவிடுவார். கடைசியாக நான் ரவுண்ட் தி விக்கெட்டிலிருந்து பந்துவீசியபோது மொயீன் அலி ஆட்டமிழந்தார். அதனால் தான் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். நான் ரவுண்ட் தி விக்கெட்டில் முன்பே ஏன் பந்துவீசவில்லை? கடைசிப் பந்தின்போது கேப்டன் தினேஷ் கார்த்திக், என்னிடம் வந்து, ரவுண்ட் தி விக்கெட் பக்கமிருந்து வீசச்சொன்னார். என்னுடைய முதன்மையான திட்டத்தின்படி நான் பந்துவீசவில்லை என்பதால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். 

அணியினர் ஒன்றுகூடியபோது நான் தனியாகத் தலைக்கவிழ்ந்தபடி அமர்ந்து அழுதுகொண்டிருக்கவில்லை. ஆனால் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தேன். நம்பிக்கையை இழந்திருந்தேன். நான் என்ன செய்துள்ளேன், அந்த ஒரு ஓவரால் ஆட்டத்தின் போக்கே மாறிவிட்டதே என்று வருந்தினேன். 15 ஓவரின் முடிவில் 120 ரன்கள் என்று இருந்தார்கள். ஆனால் அந்த ஓவரின் முடிவில் 150 ரன்கள் பக்கம் வந்துவிட்டார்கள். இதனால் ஆட்டத்தின் நிலைமையே மாறிவிட்டது. 

என்னை விடவும் சிறந்த வீரர்கள் அணியில் இருந்திருந்தால் என்னை நீக்கியது சரியாக இருந்திருக்கும். ஆனால் நீங்கள்தான் சிறந்த வீரர் என எண்ணினால் ஆட்டங்களில் நீங்கள் விளையாடியிருக்கவேண்டும். 

இந்த வருட ஐபிஎல்-லில் மனத்தளவில் இன்னும் வலுவான வீரராக நான் இருந்திருக்கவேண்டும். என் கவனத்திலும் திட்டத்திலும் சரியாக இருக்கவில்லை. இதுதான் எனக்கான முக்கியமான பாடம் என்று கூறியுள்ளார். 

குல்தீப் பந்துவீச்சில் மொயீன் அலி அடித்த சிக்ஸர்களும் பவுண்டரிகளும் - விடியோ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com