ரோஹித் சர்மா சதம்: உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா சதம் அடிக்க இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட்
நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட்


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா சதம் அடிக்க இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று (புதன்கிழமை) தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது. 

தென்னாப்பிரிக்க பேட்டிங்: http://bit.ly/2WlC2Fo

228 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். தென்னாப்பிரிக்க அணியில் ரபாடா மற்றும் மோரிஸ் மிரட்டலாக பந்துவீச ரோஹித் மற்றும் தவான் திணறினர். இதன் விளைவாக தவான் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, ரோஹித் களத்தில் விக்கெட்டை பாதுகாத்து விளையாடினார். கோலியும் அதேபோல் விளையாடி வந்தார். இந்த நிலையில், கோலி 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெலுவாயோ பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், ஆட்டத்தில் சற்று விறுவிறுப்பு ஏற்பட்டது. 

ஆனால், ராகுல் ஒத்துழைப்பு அளிக்க ரோஹித் ரன் குவிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்ததால், சுழற்பந்துவீச்சில் ரன் குவித்தனர். இதனிடையே, ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். 

இந்த இணை நன்றாக விளையாடி வந்த நிலையில், ராகுல் 26 ரன்களுக்கு ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். ரோஹித், ராகுல் இணை 3-வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தது. இது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. 

இதன்பிறகு, ரோஹித்துடன் தோனி இணைந்தார். வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 5-க்கு கீழ் இருந்ததால் இந்த இணையும் நெருக்கடி இல்லாமல் விளையாடியது. 

தாஹிர் மற்றும் ஷம்ஸி பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டதால், தென்னாப்பிரிக்க அணி 6-வது பந்துவீச்சாளர் இல்லாமல் திணறியது இந்த ஆட்டத்தில் தென்பட்டது. 

ரோஹித் சர்மாவும் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 23-வது சதத்தை எட்டினார். இதையடுத்து, இந்திய அணி வெற்றியை நெருங்கியது. தென்னாப்பிரிக்காவும் ரபாடா மூலம் நெருக்கடி தந்தது. ஆனால், ரோஹித் கேட்ச்சை மில்லர் தவறவிட, அனைத்தும் இந்திய அணிக்கு சாதகமாகவே அமைந்தது. 

இந்திய அணியின் வெற்றிக்கு 15 ரன்களே தேவை என்ற நிலையில், 34 ரன்கள் எடுத்திருந்த தோனி மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய பாண்டியா வந்த வேகத்தில் 3 பவுண்டரிகள் அடித்து வெற்றி இலக்கை அடையச் செய்தார். 

இதன்மூலம், இந்திய அணி 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஹித் சர்மா 144 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 122 ரன்கள் எடுத்தார். ஹார்திக் பாண்டியா 7 பந்துகளில் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆட்டநாயகன் விருதை ரோஹித் சர்மா தட்டிச் சென்றார். 

முதல் வெற்றி பெற்றதையடுத்து, இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com