உலகக் கோப்பை அணியில் டி வில்லியர்ஸை சேர்க்காதது ஏன்?: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விளக்கம்!

எங்கள் கொள்கைக்கு நேர்மையாக இருக்கவேண்டும். இந்த முடிவில் எங்களுக்கு வருத்தம் இல்லை...
உலகக் கோப்பை அணியில் டி வில்லியர்ஸை சேர்க்காதது ஏன்?: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விளக்கம்!

2019 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஏபி டி வில்லியர்ஸ் முயன்றுள்ளார் என்கிற அதிரடித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

கடந்த வருடம் மே 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்தார். 34 வயது டி வில்லியர்ஸ் தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார். தன்னுடைய ஓய்வு குறித்து டி வில்லியர்ஸ் கூறியதாவது: நான் சோர்வாக உள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறேன். 114 டெஸ்ட், 228 ஒருநாள், 78 டி20 ஆட்டங்களில் பங்கேற்ற பிறகு மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க இதுவே சரியான தருணம். உண்மையில் சொல்லவேண்டுமென்றால், நான் மிகவும் சோர்ந்துவிட்டேன். இது மிகவும் கடினமான முடிவாகும். நன்கு விளையாடும்போதே ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்று எண்ணினேன். இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராகக் கிடைத்த வெற்றிகளுக்குப் பிறகு, ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என எண்ணுகிறேன். டைடன்ஸ் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன். டு பிளெஸ்ஸிஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்று கூறியுள்ளார்.

114 டெஸ்டுகளில் விளையாடியுள்ள ஏபி டி வில்லியர்ஸ், 8765 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 22 சதங்களும் 46 அரை சதங்களும் அடங்கும். 228 ஒருநாள் ஆட்டங்களில் 9577 ரன்களும் 78 டி20 ஆட்டங்களில் 1672 ரன்களும் எடுத்துள்ளார். 

இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த மாதம், உலகக் கோப்பைப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியைத் தேர்வு செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு, தான் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ், பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன், தேர்வுக்குழுத் தலைவர் லிண்டா ஆகியோரிடம் தெரிவித்துள்ளார் டி வில்லியர்ஸ். ஆனால் இது சாத்தியமில்லை என்று உடனடியாக டி வில்லியர்ஸுக்குத் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய முதல் மூன்று ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியடைந்துவிட்டதால், டி வில்லியர்ஸை தென் ஆப்பிரிக்க அணிக்குள் கொண்டுவரவேண்டும் என்பதே ரசிகர்கள் பலருடைய விருப்பமாக உள்ளது. 

உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட டி வில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளதால், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் முடிவு குறித்துச் சமூகவலைத்தளங்களில் பலரும் விவாதித்து வருகிறார்கள். 

இந்நிலையில், டி வில்லியர்ஸை அணியில் சேர்க்காதது ஏன் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் லிண்டா ஸோண்டி கூறியதாவது:

2018-ல் டி வில்லியர்ஸை ஓய்வு பெற வேண்டாம் என மன்றாடினேன். அவர் நினைத்தபோது தென் ஆப்பிரிக்க அணியில் விளையாடுகிறார் என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், அது தவறானவை என்றாலும், அவர் விருப்பப்படி ஆட்டங்களைத் தேர்வு செய்து உலகக் கோப்பைப் போட்டியில் நல்ல உடற்தகுதியுடன் புத்துணர்ச்சியுடன் விளையாடும் அனுமதியை அளித்தேன். உள்ளூரில் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான தொடர்களில் அவர் கலந்துகொண்டு உலகக் கோப்பைப் போட்டித் தேர்வுக்கான தகுதியை அடையவேண்டும் என்றும் கூறினேன். ஆனால் அவர் பாகிஸ்தான், வங்கதேச டி20 லீக் போட்டிகளில் கலந்துகொண்டார். என்னுடைய கோரிக்கைகளை மறுத்து நிம்மதியாக ஓய்வு பெறுவதாகக் கூறினார்.

நாங்கள் உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியை அறிவிக்க இருந்த நாளன்று கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ், பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் ஆகியோர் என்னிடம், டி வில்லியர்ஸ் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவிப்பதாகக் கூறினார்கள். இது எங்கள் அனைவரும் அதிர்ச்சியளித்தது. அவர் ஓய்வு பெற்றதால் வெற்றிடம் உருவானது. அதை நிரப்ப எங்களுக்கு ஒரு வருடமானது. அந்தக் காலக்கட்டத்தில் கடினமாக உழைத்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டியிருந்தது. எனவே கொள்கையளவில் டி வில்லியர்ஸின் கோரிக்கையை நிராகரித்தோம். அணிக்கும் தேர்வுக்குழுவுக்கும் கிரிக்கெட் அமைப்புக்கும் வீரர்களுக்கும் நாங்கள் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும். 

கடந்த ஒரு வருடமாக, தெ.ஆ. அணியில் தேர்வு செய்ய தன்னை அவர் தயாராக வைத்திருக்கவில்லை. அவருடைய கோரிக்கை எங்களுக்குக் கிடைத்தபோது உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணி உறுதி செய்யப்பட்டிருந்தது. ஏபி டி வில்லியர்ஸ், உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே சமயம் நாங்கள் எங்கள் கொள்கைக்கு நேர்மையாக இருக்கவேண்டும். இந்த முடிவில் எங்களுக்கு வருத்தம் இல்லை என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com