ராணுவ முத்திரையைக் கொண்ட கிளவுஸ் சர்ச்சை: தோனிக்கு ஆதரவளிக்க பிசிசிஐ முடிவு!

இந்தச் சர்ச்சையில் தோனியின் பக்கம் நிற்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது...
ராணுவ முத்திரையைக் கொண்ட கிளவுஸ் சர்ச்சை: தோனிக்கு ஆதரவளிக்க பிசிசிஐ முடிவு!

தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2019 உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா. சஹல், ரோஹித் சர்மா அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். 

இந்நிலையில் அந்த ஆட்டத்தில் தோனி பயன்படுத்திய கிளவுஸ் தொடர்பாகப் புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி, இந்தியத் துணை ராணுவ சிறப்புப் படையின் பாலிதான் என்கிற முத்திரையைக் கொண்ட கிளவுஸை அணிந்திருந்தார். தியாகம் என்கிற அர்த்தம் கொண்ட முத்திரை அது. 2011-ல் தோனிக்கு ராணுவத்தில் கெளரவ லெப்டினெண்ட் பதவி வழங்கப்பட்டது. ராணுவ வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக, நாட்டுப்பற்றுடன் ராணுவ முத்திரை கொண்ட கிளவுஸை தோனி அணிந்திருந்தார் என்று கூறப்படுகிறது.

ஆனால், இது ஐசிசி விதிமுறையை மீறியுள்ளதாக பிசிசிஐயிடம் ஐசிசி புகார் அளித்துள்ளது. இதையடுத்து தோனியின் கிளவுஸில் உள்ள ராணுவ முத்திரையை அப்புறப்படுத்த வேண்டும் என்று பிசிசிஐக்கு ஐசிசி கட்டளையிட்டுள்ளது. ஐசிசி விதிமுறைகளின்படி வீரர்களின் ஆடைகள், கிரிக்கெட் உபகரணங்களில் மதம், அரசியல் போன்றவற்றின் பிரசாரம் இருக்கக்கூடாது. அதனால் இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தோனி முதல்முறையாக இந்த விதிமுறையை மீறியுள்ளதால் அவருக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சர்ச்சையில் தோனியின் பக்கம் நிற்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் இதுகுறித்து பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

பிசிசிஐ ஏற்கெனவே ஐசிசிக்குக் கோரிக்கை அனுப்பியுள்ளது, தோனியின் குறிப்பிட்ட அந்த கிளவுஸை அனுமதிக்கும்படி. ஐசிசி விதிமுறைகளின்படி வீரர்களின் ஆடைகள், கிரிக்கெட் உபகரணங்களில் மதம், அரசியல் போன்றவற்றின் பிரசாரம் இருக்கக்கூடாது. ஆனால் தோனியின் கிளவுஸில் உள்ள முத்திரையில் வணிக நோக்கமோ, மத உணர்வுகளோ எதுவும் கிடையாது. 

ஐசிசி எங்களுக்குக் கட்டளையிடவில்லை. கோரிக்கைதான் வைத்துள்ளது. பிசிசிஐயின் தலைமைச் செயல் அதிகாரி ராஹுல் ஜோஹ்ரி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு இங்கிலாந்துக்குச் சென்று ஐசிசிஐயிடம் தோனியின் கிளவுஸை அனுமதிக்கும்படி கோரிக்கை வைப்பார் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com