ஆமீர் மிரட்டலில் தடுமாறிய நடுவரிசை பேட்ஸ்மேன்கள்: 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நன்றி: ஆஸ்திரேலியா /உலகக் கோப்பை கிரிக்கெட்
நன்றி: ஆஸ்திரேலியா /உலகக் கோப்பை கிரிக்கெட்


பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 17-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஃபின்ச் மற்றும் வார்னர் களமிறங்கினர். 

சூப்பர் துவக்கம்:

இந்த இணை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை விளாசியது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 50, 100 ரன்களை கடந்து பயணித்தது. முதலில் ஃபின்ச் அரைசதம் அடித்தார். அவரைத்தொடர்ந்து, வார்னர் அரைசதம் அடித்தார். இந்த இணை துரிதமாகவும் ரன் சேர்த்து வந்ததால், அணியின் ரன் ரேட்டும் ஓவருக்கு 6 ரன்கள் என்ற ரீதியில் இருந்தது.

இந்த நிலையில், முதல் விக்கெட்டாக ஃபின்ச் ஆமிர் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 84 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 82 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு ஃபின்ச், வார்னர் இணை 146 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணிக்கு இவர்கள் நல்ல அடித்தளம் அமைத்ததால், 350 ரன்கள் வரை குவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இதையடுத்து, வார்னர் சற்று துரிதமாக விளையாடி வந்தார். ஆனால், ஸ்டீவ் ஸ்மித் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, களமிறங்கிய மேக்ஸ்வெல் வந்த வேகத்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

விக்கெட்டுகள் சரிந்த போதிலும், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வார்னர் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 15-வது சதத்தை அடித்தார். ஆனால், அவரும் சதமடித்த கையோடு 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ஆமீர் மிரட்டல்: 

ஃபின்ச், வார்னர் அமைத்து தந்த அடித்தளத்தை பயன்படுத்த தவறிய ஆஸ்திரேலியாவின் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் 30 ரன்களைக் கூட எட்டாமல் ஆமீர் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கவாஜா 18, மார்ஷ் 23, கூல்டர் நைல் 2 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜொலித்த அலெக்ஸ் கேரியும் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதனால், ஒருகட்டத்தில் 350 ரன்கள் வரை எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

பாகிஸ்தான் தரப்பில் ஆமீர் 5 விக்கெட்டுகளையும், அப்ரிடி 2 விக்கெட்டுகளையும், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகமது ஹபீஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.  

இதன்மூலம், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 308 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com