ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் போராடி தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.    
நன்றி: டிவிட்டர்/ உலகக் கோப்பை கிரிக்கெட்
நன்றி: டிவிட்டர்/ உலகக் கோப்பை கிரிக்கெட்


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

ஆஸ்திரேலியா பேட்டிங்: http://bit.ly/2XBWX3O

308 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹக் மற்றும் ஃபகார் ஸமான் களமிறங்கினர். ஸமான் ரன் ஏதும் எடுக்காமல் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து, களமிறங்கிய பாபர் அஸாம் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து சற்று நெருக்கடியை தணித்தார். இமாம் மற்றும் பாபர் ஓரளவு பாட்னர்ஷிப்பை கட்டமைத்து வந்த நிலையில், கூல்டர் நைல் பவுன்சரில் பாபர் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, இமாம் மற்றும் ஹபீஸ் மீண்டும் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். தொடக்க வீரர் இமாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஹபீஸ் சற்று துரிதமாக ரன் குவித்து ரன் ரேட்டை நல்ல நிலையில் கடைபிடித்து வந்தார். அரைசதம் அடித்து நம்பிக்கையளித்த இமாம் உல் ஹக், வைட் பந்தை பவுண்டரிக்கு விரட்ட முயன்று கீப்பரிடம் கேட்ச் ஆனார். அவர் 53 ரன்கள் எடுத்தார். இவரைத்தொடர்ந்து, ஹபீஸும் கேப்டன் ஃபின்ச் பந்தில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த இரண்டு விக்கெட்டுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. 

இந்த இரண்டு விக்கெட்டுகளைத் தொடர்ந்து, ஷோயப் மாலிக் ரன் ஏதும் எடுக்காமலும், ஆசிப் அலி 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 160 ரன்களுக்குள் 60 ரன்களை இழந்து சற்று திணறியது. 

ஆனால், இவர்களுக்குப் பிறகு களமிறங்கிய ஹசன் அலி வந்த வேகத்தில் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக அடித்து மிரட்டினார். கேப்டன் சர்பிராஸ் அகமது இதனால் விக்கெட்டை பாதுகாத்து விளையாடி வந்தார். ஹசன் அலியின் அதிரடியினால், பாகிஸ்தான் அணியின் ரன் மளமளவென உயர்ந்தது. இது ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. 

ஆனால், ஹசன் அலியும் ரிச்சர்ட்ஸன் பவுன்சரில் வீழ்ந்தார். அவர் 15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 32 ரன்கள் எடுத்தார்.  

இதையடுத்து, மீண்டும் சர்பிராஸ் உடன் இணைந்து வாஹப் ரியாஸ் அதிரடியாக ரன் குவித்தார். இதனால், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் சற்று குறைந்தது, வெற்றி இலக்கும் நெருங்கியது. இந்த இணை 8-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது. இந்த நிலையில், ஸ்டார்க் பந்தில் வாஹப் ரியாஸ் ஆட்டமிழந்தார். அவர் 39 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து, ஆமீர் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் வேகத்தில் போல்டானார். 

இதன்மூலம், கடைசி விக்கெட்டுடன் 43 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் கேப்டன் சர்பிராஸ் இருந்தார். ஆனால், தேவையில்லாத ரன்னை எடுக்க முயன்று மேக்ஸ்வெல்லின் அற்புத த்ரோ மூலம் சர்பிராஸ் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அவர் 40 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், அந்த அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் ரிச்சர்ட்ஸன் தலா 2 விக்கெட்டுகளையும், கூல்டர் நைல் மற்றும் ஃபின்ச் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

பேட்டிங்கில் சதம் அடித்த வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com