முக்கியமான கட்டங்களில் விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா: நியூஸிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்துள்ளது.
நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட்
நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட்


நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. மைதானம் ஈரப்பதமாக இருந்த காரணத்தினால், டாஸ் போடுவதிலேயே தாமதம் ஏற்பட்டது. இதனால், இந்திய நேரப்படி 2.30 மணிக்கு போட வேண்டிய டாஸ், 4 மணிக்கு போடப்பட்டது. இந்த தாமதத்தினால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

இதையடுத்து, ஆட்டம் 4.30 மணிக்கு தொடங்கியது. தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆம்லா மற்றும் டி காக் களமிறங்கினர். டி காக், போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே 5 ரன்களுக்கு போல்டானார். 

ஆடுகளம் சற்று மந்தமாக இருந்ததால் ஆம்லா மற்றும் கேப்டன் டு பிளெஸ்ஸி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த டு பிளெஸ்ஸி 23 ரன்கள் எடுத்த நிலையில் பெர்குசன் பந்தில் போல்டானார். இந்த இணை 2-வது விக்கெட்டுக்கு சரியாக 50 ரன்கள் சேர்த்தது. 

இதன்பிறகு, ஆம்லா மற்றும் மார்கிராம் பாட்னர்ஷிப்பை கட்டமைத்து விளையாடினர். இந்த இணையும் பொறுமையாகவே விளையாடி 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. ஆனால், இந்த பாட்னர்ஷிப்பை 100 ரன்களாக மாற்றுவதி இந்த முறையும் தவறியது. 3-வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்திருந்த முக்கியமான கட்டத்தில் ஆம்லா 55 ரன்களில் (83 பந்துகள்) சான்டனர் பந்தில் போல்டானார். இவரைத்தொடர்ந்து, மார்கிராமும் சற்று நேரத்திலேயே38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, வான் டேர் டஸ்ஸன் மற்றும் மில்லர் மீண்டும் மற்றுமொரு பாட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்த இணையும் தொடக்கத்தில் சற்று நிதானம் காட்டினாலும், போக போக துரிதமாக ரன் சேர்ப்பதில் கவனம் செலுத்தியது. இந்த நிலையில், மில்லர் மீண்டும் தவறான நேரத்தில் ஆட்டமிழந்து அந்த அணிக்கு ஏமாற்றம் அடைந்தார். வான் டேர் டஸ்ஸன், மில்லர் இணை 72 ரன்கள் சேர்த்தது. மில்லர் 37 பந்துகளில் 36 ரன்கள் குவித்து 45-வது ஓவரில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, வான் டேர் டஸ்ஸன் ஃபினிஷிங் பொறுப்பை ஏற்று துரிதமாக ரன் சேர்த்தார். இதனிடையே, அவர் தனது 56-வது பந்தில் அரைசதத்தையும் எட்டினார். இன்னிங்ஸில் கடைசி இரண்டு பந்துகளில் முறையே சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து டஸ்ஸன் நல்ல ஃபினிஷிங்கை தந்தார். 

இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது.

நியூஸிலாந்து தரப்பில் பெர்குசன் 3 விக்கெட்டுகளையும், போல்ட், சான்ட்னர் மற்றும் கிராண்ட்ஹோம் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com