உலகக் கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கண்ணீர்த் தருணங்கள்!

சோகத் தருணங்கள் இல்லாத ஒரு உலகக் கோப்பை தென் ஆப்பிரிக்க அணிக்கு அமையுமா?
உலகக் கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கண்ணீர்த் தருணங்கள்!

உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகக் கண்ணீர்த் தருணங்களைச் சந்தித்துள்ள அணி என தென் ஆப்பிரிக்க அணியைக் கூறலாம். துரதிர்ஷ்டம் கொண்ட அணி என்று தென் ஆப்பிரிக்க அணியைத் தவிர வேறு எந்த அணியையும் கூறமுடியாது. 

1992 உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதிச்சுற்றில் மழை வரும் முன்பு, தென் ஆப்பிரிக்க அணிக்கு 13 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் சில நிமிடங்கள் மழையால் அத்தனையும் பாழாய்ப் போனது. ஒரு பந்தில் 22 ரன்கள் என்கிற இலக்கு தெ.ஆ-வுக்கு வழங்கப்பட்டது. இங்கிலாந்து அணி வென்றது. சோகத்துடன் வெளியேறினார்கள் தெ.ஆ. வீரர்கள். ஆனால் இந்தக் குளறுபடி காரணமாக டக்வொர்த் லூயிஸ் விதிமுறை அறிமுகமானது. 

1999 உலகக் கோப்பை இன்னும் சோகமாக முடிந்தது. ஆலன் டொனால்ட் ரன் அவுட் ஆனதால் இறுதிச்சுற்று வாய்ப்பு தகர்ந்தது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்கள் அந்த ஆட்டத்தை எண்ணி எண்ணி வருத்தப்படாத நாளே இருக்கமுடியாது. மிகச்சிறந்த ஒருநாள் ஆட்டமாகக் கருதப்பட்டாலும் தென் ஆப்பிரிக்க அணியினரால் மறக்க முடியாத ஒருநாள் ஆட்டமாக அது அமைந்துவிட்டது. 

2003-ல் டக்வொர்த் லூயிஸ் விதிமுறையும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எமனாக அமைந்தது. இலங்கைக்கு எதிராக இரு பந்துகளில் ஏழு ரன்கள் அடித்தால் அரையிறுதிச்சுற்று உறுதி என்கிற நிலை. மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டதால் அடைய வேண்டிய இலக்கைச் சரியாக அறிந்துகொள்ளாமல் இருந்துவிட்டார் மார்க் பெளச்சர். முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார். அதுவே வெற்றிக்குப் போதும் என எண்ணி, அடுத்தப் பந்தில் அவர் ரன் எடுக்கவில்லை. எல்லாம் போச்சு. 

2019-ல் அந்த ஒரு வாய்ப்பை மட்டும் பயன்படுத்தியிருந்தால் வெளியேற்றத்தை அந்த அணி ஒருவேளை தவிர்த்திருக்கலாம். நேற்று, வில்லியம்சன் 76 ரன்களில் இருந்தபோது தாஹிர் வீசிய பந்து வில்லியம்சனின் பேட்டை உரசி விக்கெட் கீப்பரிடம் கேட்சாக மாறியது. ஆனால் அதை தாஹிரும் டி காக்கும் உணராததால் தப்பித்தார் வில்லியம்சன். டிஆர்எஸ் கோரியிருந்தால் நிச்சயம் மாட்டியிருப்பார் வில்லியம்சன். அதேபோல ஒரு நல்ல ரன் அவுட் வாய்ப்பையும் தவறவிட்டது தென் ஆப்பிரிக்க அணி. 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புதன்கிழமை பர்மிங்ஹாமில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 241/6 ரன்களைச் சேர்த்தது. இரண்டாவதாக ஆடிய நியூஸி. 245/6 ரன்களை எடுத்து வெற்றது. இந்த வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் 9 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றது நியூஸிலாந்து.  தோல்வியடைந்த தென் ஆப்பிரிக்க அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தத் தோல்வியால், உலகக் கோப்பைப் போட்டியில் கடைசி ஓவரில் அதிக தடவை தோற்றுள்ள அணி என்கிற வேதனையைச் சந்தித்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இதுவரை அந்த அணி இரண்டாவதாகப் பந்துவீசும்போது 5 முறை கடைசி ஓவரில் தோற்றுள்ளது. இதுபோல வேறெந்த அணிக்கும் நேர்ந்ததில்லை. 

சோகத் தருணங்கள் இல்லாத ஒரு உலகக் கோப்பை தென் ஆப்பிரிக்க அணிக்கு அமையுமா? அதை நாம் காணும் வாய்ப்பு கிடைக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com