ஷார்ட்... ஷார்ட்... விக்கெட்... விக்கெட்...: மே.இ. அணியின் ஆக்ரோஷமான பந்துவீச்சில் 105 ரன்களுக்குச் சுருண்ட பாகிஸ்தான் அணி!

ஆரம்பம் முதல் அனைத்து மே.இ. அணி வேகப்பந்துவீச்சாளர்களும் ஷார்ட் பிட்ச் பந்துகளில் கூடுதல் கவனம் செலுத்தி...
ஷார்ட்... ஷார்ட்... விக்கெட்... விக்கெட்...: மே.இ. அணியின் ஆக்ரோஷமான பந்துவீச்சில் 105 ரன்களுக்குச் சுருண்ட பாகிஸ்தான் அணி!

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2019 ஒருநாள் உலகக் கோப்பை, வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மே.இ. அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் ஆசிஃப் அலி இடம்பெறவில்லை. எவின் லூயிஸ், கேப்ரியல் ஆகியோர் முழு உடற்தகுதியை அடையவில்லை என்று கூறினார் மே.இ. அணி கேப்டன் ஹோல்டர். அந்த அணியில் ரஸ்ஸல் இடம்பெற்றுள்ளார். 

ஆரம்பம் முதல் அனைத்து மே.இ. அணி வேகப்பந்துவீச்சாளர்களும் ஷார்ட் பிட்ச் பந்துகளில் கூடுதல் கவனம் செலுத்தினார்கள். இதை முக்கியமான உத்தியாகக் கையாண்டது மிகவும் பலன் அளித்தது. 

இமாம் உல் ஹக் காட்ரெல் பந்துவீச்சில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஸ்ஸல் தனது முதல் ஓவரிலேயே பவுன்சர் பந்தின் மூலம் ஃபகார் ஸமானை 22 ரன்களில் வெளியேற்றினார். பந்து ஃபகாரின் ஹெல்மெட்டில் பட்டு ஸ்டம்பின் மேல் விழுந்தது. அதன்பிறகு மற்றொரு ஷார்ட் பந்தின் மூலம் ஹாரிஸ் சொஹைலை 8 ரன்களில் வெளியேற்றினார் ரஸ்ஸல். இதன்பிறகு பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மே.இ. அணியின் பந்துவீச்சு அதன்பிறகு மேலும் ஆக்ரோஷமாக இருந்ததால் தடுமாறிப் போனார்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள். 

33 பந்துகள் எதிர்கொண்டு ஓரளவு தாக்குப்பிடித்த பாபர் அஸாம் 22 ரன்களில் ஷாய் ஹோப்பின் அற்புதமான கேட்சில் ஆட்டமிழந்தார். 17-வது ஓவரை வீசிய ஹோல்டர் - கேப்டன் சர்ஃபாஸ் அஹமது, இமாத் வாசிம் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அடுத்த ஓவரில் ஷதாப் கான் டக் அவுட் ஆனார். அவருடைய விக்கெட்டை தாமஸ் வீழ்த்தினார். அடுத்த ஓவரிலும் இன்னொரு விக்கெட் விழுந்தது. ஹசன் அலியை 1 ரன்னில் வெளியேற்றினார் ஹோல்டர். 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்த முஹமது ஹஃபீஸ் 16 ரன்களில் தாமஸின் ஷார்ட் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 86 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான்.

ஹோல்டர் வீசிய அடுத்த ஓவரில் வஹாப் ரியாஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணி 100 ரன்களைத் தாண்ட உதவினார். அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்தார் வஹாப். எனினும் அவரை அடுத்த ஓவரில் 18 ரன்களில் வீழ்த்தினார் தாமஸ்.

இதனால் பாகிஸ்தான் அணி, 21.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மே.இ. அணியில் ஒஷானே தாமஸ் 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளையும் காட்ரெல் 1 விக்கெட்டையும் வீழ்த்தி மே.இ. அணி ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com