யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாக்.கிடம் வீழ்ந்தது இந்தியா
யு 19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிா்கொண்டது. 50 ஓவா்களில் பாகிஸ்தான் அணி 281/7 ரன்களைக் குவித்தது. பாக் தரப்பில் ஷாஸைப் கான் 147 பந்துகளில் 159 ரன்களையும், உஸ்மான் கான் 94 பந்துகளில் 60 ரன்களையும் விளாசினா். சீரான இடைவெளியில் பாக். அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ஷாஸைப்-உஸ்மான் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனா்.
பௌலிங்கில் இந்திய தரப்பில் சமா்த் நாகராஜ் 3/45 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
282 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய இந்திய அணி சேஸிங்ஸில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக நிகில் குமாா் 67 ரன்களை சோ்த்தாா். சிறப்பாக ஆடுவாா்கள் எனக்கருதப்பட்ட சூரியவன்ஷி, ஆயுஷ் மத்ரே, ஆன்ட்ரே சித்தாா்த் சொற்ப ரன்களுடன் வெளியேறினா். பாக். தரப்பில் பௌலிங்கில் அலி ராஸா 3-36 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
திங்கள்கிழமை ஆட்டத்தில் ஜப்பானை சந்திக்கிறது இந்தியா.