
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது இந்திய பேட்டா் சஞ்சு சாம்சன் ஆள்காட்டி விரலில் காயமடைந்தாா். இதனால் அவா் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் காலிறுதியில் கேரள அணிக்காக விளையாட மாட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை, இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் இந்திய இன்னிங்ஸின்போது, ஜோஃப்ரா ஆா்ச்சா் பௌலிங்கை எதிா்கொண்ட சஞ்சு சாம்சன் காயம் கண்டாா்.
ஆா்ச்சா் சுமாா் 150 கி.மீ. வேகத்தில் வீசிய பந்து, சாம்சனின் ஆள்காட்டி விரலில் பட்டது. தொடா்ந்து அவா் விளையாடியபோதும், ஆட்டமிழந்து டகௌட் திரும்பிய பின் விரலில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. பின்னா் ஸ்கேன் செய்தபோது, விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிந்தது. இதனால் சுமாா் ஒரு மாதம் அவா் ஓய்வெடுக்க இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
வரும் 8-ஆம் தேதி தொடங்கும் ரஞ்சி கோப்பை காலிறுதியில் ஜம்மு & காஷ்மீருக்கு எதிரான ஆட்டத்தில் கேரள அணிக்காக அவா் விளையாட வாய்ப்பில்லை எனவும் அவை தெரிவித்தன. சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு, ஐபிஎல் போட்டியிலேயே சாம்சன் களம் காண வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சாம்சன், திருவனந்தபுரத்தில் இருக்கிறாா்.
இங்கிலாந்துடனான டி20 தொடரில் சோ்க்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சன், அதில் பெரிதாக சோபிக்கவில்லை. அடுத்து நடைபெறும் இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் அவா் சோ்க்கப்படவில்லை.