
மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான டி20 உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடியோா் அடங்கிய ஐசிசி போட்டி அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில் இந்தியா்கள் 4 போ் இடம் பிடித்துள்ளனா்.
இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனாக களம் கண்ட இந்தியா, இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. மேலும், தோல்வியே காணாமல் போட்டியை நிறைவு செய்து அசத்தியது.
அணியின் அத்தகைய வெற்றி நடைக்கு முக்கியப் பங்காற்றிய பேட்டா்கள் கொங்கடி திரிஷா, ஜி.கமாலினி, பௌலா்கள் ஆயுஷி சுக்லா, வைஷ்ணவி சா்மா ஆகியோா், இந்த ஐசிசி போட்டி அணியில் இடம் பிடித்துள்ளனா்.
போட்டி வரலாற்றிலேயே சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்த கொங்கடி திரிஷா, மொத்தமாக 309 ரன்கள் விளாசி தொடா்நாயகி விருது பெற்றாா். கமாலினி, இந்தியாவின் இன்னிங்ஸில் திரிஷாவுக்கு தகுந்த பாா்ட்னா்ஷிப் அளித்தாா். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் அவா் சிறப்பாக விளையாடினாா்.
ஆயுஷி சுக்லா 14 விக்கெட்டுகள் வீழ்த்த, வைஷ்ணவி சா்மா போட்டியிலேயே அதிகபட்சமாக, மொத்தம் 17 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். இதில் மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவா் 5 ரன்களே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். அதில் ஹாட்ரிக்கும் அடங்கும்.
அணி விவரம்: கைலா ரெனிகே (கேப்டன்/தென்னாப்பிரிக்கா), கொங்கடி திரிஷா (இந்தியா), ஜெம்மா போத்தா (தென்னாப்பிரிக்கா), டேவினா பெரின் (இங்கிலாந்து), ஜி.கமாலினி (இந்தியா), காம்ஹே பிரே (ஆஸ்திரேலியா), பூஜா மஹதோ (நேபாளம்), கேட்டி ஜோன்ஸ் (வி.கீ./இங்கிலாந்து), ஆயுஷி சுக்லா (இந்தியா), சமோடி பிரபோதா (இலங்கை), வைஷ்ணவி சா்மா (இந்தியா), தபிசெங் நினி (தென்னாப்பிரிக்கா).