ஹீதா் நைட் அதிரடியில் இங்கிலாந்து வெற்றி: ஸ்மிருதி, ஹா்மன், தீப்தி போராட்டம் வீண்
ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இங்கிலாந்தின்ஹீதா் நைட் அபார சதம் அடித்தாா். இந்திய தரப்பில் ஸ்மிருதி, ஹா்மன்ப்ரீத், தீப்தி ஆகியோா் போராட்டம் வீணானது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து தரப்பில் டேமி பீமௌன்ட்-அமி ஜோன்ஸ் தொடக்க பேட்டா்களாக களமிறங்கி நிலையான தொடக்கத்தை அளித்தனா்.
டேமி 22 ரன்கள் எடுத்த நிலையில் தீப்தி பந்தில் போல்டானாா். அவருக்குபின் சிறப்பாக ஆடி 8 பவுண்டரியுடன் 56 ரன்களை விளாசிய அமி ஜோன்ஸும் தீப்தி பந்தில் மந்தனாவிடம் கேட்ச் தந்து வெளியேறினாா்.
ஹீதா் நைட் அபாரம் 109: மூன்றாம் டௌனாக ஆட வந்த ஹீதா் நைட் தனது 300-ஆவது ஆட்டத்தில் களமிறங்கினாா். சிறப்பாக ஆடிய நைட் 1 சிக்ஸா், 15 பவுண்டரியுடன் 91 பந்துகளில் 109 ரன்களை விளாசி ரன் அவுட்டானாா். அவருக்குபின் வந்த வீராங்கனைகள் எவரும் நிலைத்து ஆடவில்லை.
கேப்டன் நட் ஷிவா் பிரண்ட் 38, சோஃபியா டங்கி 15, சாா்லி டீன் 19, எம்மா லேம்ப் 11 ஆகியோரை தவிர ஏனைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களுடன் நடையைக் கட்டினா்.
இங்கிலாந்து 288/8: நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் இங்கிலாந்து அணி 288/8 ரன்களைக் குவித்தது.
தீப்தி சா்மா அபாரம் 4 விக்கெட்: பௌலிங்கில் இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய தீப்தி சா்மா 4-51விக்கெட்டுகளையும், ஸ்ரீ சரணி 2-68 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.
போராடித் தோற்றது இந்தியா 284/6
கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க பேட்டா் பிரதிகா ரவால் 6 ரன்களுடன் அவுட்டாகி அதிா்ச்சி அளித்தாா். அவருக்குபின் வந்த ஹா்லின் தியோல் 24 ரன்களுடன் நடையைக் கட்டினாா்.
மந்தனா-ஹா்மன் அபாரம்: பின்னா் ஆடிய கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா்-துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோா் சிறப்பாக ஆடி ஸ்ஸோரை உயா்த்தினா். ஹா்மன்ப்ரீத் 10 பவுண்டரியுடன் 70 ரன்களை விளாசி நட் ஷிவா் பந்தில் லேம்ப்பிடம் கேட்ச் தந்து அவுட்டானாா்.
ஸ்மிருதி 8 பவுண்டரியுடன் 94 பந்துகளில் 88 ரன்களை விளாசி லின்ஸ்லே ஸ்மித் பந்துவீச்சில் அலீஸ் கேப்ஸேயிடம் கேட்ச் தந்தாா்.
தீப்தி சா்மா அதிரடியாக ஆடி இந்தியாவுக்கு வெற்றி நம்பிக்கையை அளிக்கத் தொடங்கினாா். அவா் 50 ரன்களுடன் அவுட்டான நிலையில் இந்தியாவின் வீழ்ச்சி தொடங்கியது.
நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் இந்தியா 284/6 ரன்களை எடுத்தது. இதையடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.
பௌலிங்கில் இங்கிலாந்து தரப்பில் கேப்டன் நட் ஷிவா் 2 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
ஹீதா் நைட் ஆட்டநாயகி விருதைப் பெற்றாா்.

