குரோஷியாவின் சாதனை வெற்றி: உலகக் கோப்பை வரலாற்றில் எந்த இடத்தைப் பிடிக்கப் போகிறது?

1978-க்குப் பிறகு முதல்முறையாக இறுதிப் போட்டியில் விளையாடிய அணிகள் இரண்டும்...
குரோஷியாவின் சாதனை வெற்றி: உலகக் கோப்பை வரலாற்றில் எந்த இடத்தைப் பிடிக்கப் போகிறது?

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குரோஷிய அணி. அந்த அணி முதல்முறையாக இந்தத் தகுதியை அடைந்துள்ளது.

இங்கிலாந்து அணி காலிறுதியில் ஸ்வீடனையும், குரோஷியா போட்டியை நடத்தும் ரஷியாவையும் வென்று அரையிறுதிக்கு முன்னேறின. கடந்த 1998-க்கு பின் தற்போது தான் குரோஷியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. அப்போது போட்டியை நடத்திய நாடான பிரான்ஸிடம் தோல்வி கண்டது. அதே நேரத்தில் 1966 சாம்பியனான இங்கிலாந்தும் 1990-க்குப் பிறகு தற்போது தான் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பையில் துவக்கம் முதலே தனது தாக்குதல் ஆட்டத்தால் எதிரணிகள் மீது கோல் மழை பொழிந்தது. இந்த ஆட்டத்துக்கு முன்பு அந்த அணி வீரர்கள் மொத்தம் 11 கோல்களை அடித்துள்ளனர். இதில் 8 கோல்கள் திட்டமிட்டு அடிக்கப்பட்டவையாகும். 

குரோஷிய அணியும் முதல் சுற்றில் தோல்வியே காணாமல் அரையிறுதிக்கு முன்னேறியது. மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனாவை 3-0 என வீழ்த்திய பிறகு குரோஷியா அனைவரதும் கவனத்தையும் கவர்ந்து விட்டது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 5-வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் மூலமாக அற்புதமான கோலை அடித்தார் இங்கிலாந்தின் டிரிப்பியர். ஆனாலும் முதல் பாதியில் கிடைத்த பல வாய்ப்புகளை இங்கிலாந்து வீரர்கள் வீணடித்தார்கள். 

68-வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தது குரோஷியா. கடைசிவரை இரு அணிகளும் 1-1 என இருந்ததால் கூடுதல் நேரம் தொடங்கப்பட்டது.

அதில் 109-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் மரியோ அட்டகாசமான கோலை அடித்தார். இதனால் குரோஷிய அணி முன்னிலை அடைந்தது. இதன்பிறகு இங்கிலாந்து வீரர்கள் கடும் முயற்சி எடுத்தும் பதில் கோலை அடிக்க முடியாததால் அரையிறுதியில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது குரேஷிய அணி. ஞாயிறன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதவுள்ளன. இந்திய நேரம் இரவு 8.30 மணிக்குத் தொடங்கவுள்ளது. அதற்கு முன்பு, மூன்றாவது இடத்துக்கான போட்டி, சனிக்கிழமையன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்கவுள்ளது. அதில் இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் மோதவுள்ளன.

*

இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள பிரான்ஸ் இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் குரோஷிய அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. இதையடுத்து ஞாயிறன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியை வென்று 2 முறை சாம்பியன்கள் ஆன ஆர்ஜென்டீனா, உருகுவே அணிகளுடன் பிரான்ஸ் இணையப் போகிறதா, அல்லது உலகக் கோப்பையை வெல்லும் 9-வது அணி என்கிற பெருமையை குரோஷிய அணி அடையவுள்ளதா என்கிற எதிர்பார்ப்பில் உள்ளார்கள் ரசிகர்கள். 

உலகக் கோப்பையை வென்ற அணிகள் 

பிரேஸில் - 1958, 1962, 1970, 1994, 2002 (5)
ஜெர்மனி - 1954, 1974, 1990, 2014 (4)
இத்தாலி - 1934, 1938, 1982, 2006 (4)
ஆர்ஜென்டீனா - 1978, 1986 (2)

உருகுவே - 1930, 1950 (2)
பிரான்ஸ் - 1998 (1)
இங்கிலாந்து - 1966 (1)
ஸ்பெயின் - 2010 (1)

இதுவரை நான்கு அணிகள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியும் கோப்பையை வெல்ல முடியாமல் உள்ளன. இந்தப் பட்டியலில் குரோஷியா இணையக்கூடாது என்பதுதான் அதன் ரசிகர்களின் விருப்பம்.

1. நெதர்லாந்து (1974, 1978, 2010)
2. ஹங்கேரி (1938, 1954)
3. செக் குடியரசு (1934, 1962)
4. ஸ்வீடன் (1958)

1974-ல் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முதல்முறையாகத் தகுதி பெற்ற நெதர்லாந்து அணி, பிறகு ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது. எனினும், 1978-க்குப் பிறகு முதல்முறையாக இறுதிப் போட்டியில் விளையாடிய அணிகள் இரண்டும் (1998 - பிரான்ஸ், 2010 - ஸ்பெயின்)  உலகக் கோப்பையை வென்றுள்ளன. இந்தச் சாதனை குரோஷிய அணியின் வெற்றியிலும் தொடருமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com