பிரான்ஸ் அணி கால்பந்து விளையாட்டை விளையாடவில்லை: தோல்வியடைந்த குரோஷிய அணி வீரர் காட்டம்!

அவர்கள் வேறு வழியைக் கையாண்டார்கள். அவர்கள் கால்பந்து விளையாட்டை விளையாடவில்லை... 
பிரான்ஸ் அணி கால்பந்து விளையாட்டை விளையாடவில்லை: தோல்வியடைந்த குரோஷிய அணி வீரர் காட்டம்!

பிரான்ஸ்-குரோஷியா அணிகள் இடையிலான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 இறுதி ஆட்டம் மாஸ்கோ லுஷ்னிக் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு  நடைபெற்றது.

குரோஷியா சேம்சைட் கோல்: 18-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் பார்வர்ட் கிரைஸ்மேன் ஃப்ரீ கிக் வாய்ப்பு மூலம் அடித்த பந்தை குரோஷிய வீரர் மரியோ மண்ட்ஸுகிக் தனது தலையால் தடுக்க முயன்ற போது, சேம் சைட் கோலானது. இதன் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் குரோஷிய அணியின் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியதால் 28-ஆவது நிமிடத்தில் அதன் வீரர் விடா கடத்தி அனுப்பிய பந்தை இவான் பெரிஸிக் அற்புதமாக கோலாக்கினார். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக 38-ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் புரிந்த தவறால் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை பிசகின்றி கோலாக்கினார் பிரான்ஸ் வீரர் கிரைஸ்மேன். இதனால் முதல் பாதி ஆட்ட நிறைவில் 2-1 என பிரான்ஸ் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் குரோஷிய வீரர்களின் ஆட்டம் சோபிக்கவில்லை. பிரான்ஸ் அணி வீரர்கள் தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்தியதன் விளைவாக 59-ஆவது நிமிடத்தில் அதன் மிட்பீல்டர் போக்பா கோலடித்தார்.  அதன் தொடர்ச்சியாக 65-ஆவது நிமிடத்தில் ஹெர்ணான்டெஸ் அனுப்பிய பந்தை இளம் வீரர் மாப்பே 25 அடிகள் தூரத்தில் இருந்து அற்புதமாக கோலாக்கினார். 68-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸ் வசம் இருந்த பந்தை பறித்து குரோஷிய பார்வர்ட் மரியோ மண்ட்ஸுகிக் கோலாக்கினார். பின்னர் குரோஷிய வீரர்கள் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தத் தோல்வி குறித்து குரோஷிய அணி வீரர் லோவ்ரென் கூறியதாவது:

நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அவர்களை விடவும் நன்றாக விளையாடினோம். கால்பந்து திறமையை அருமையாக வெளிப்படுத்தினோம். உலகக் கோப்பையை பிரான்ஸ் வெல்லும் என்று சொல்லப்பட்டது. அவர்கள் வென்றுவிட்டார்கள். 

அவர்கள் வேறு வழியைக் கையாண்டார்கள். அவர்கள் கால்பந்து விளையாட்டை விளையாடவில்லை. தங்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து கோல்கள் அடித்துள்ளார்கள்.

அவர்களுக்கென்ன தனி உத்தி வைத்துள்ளார்கள். அதை நாம் மதிக்க வேண்டும். இந்தப் போட்டியில் எல்லா ஆட்டங்களையும் அப்படித்தான் விளையாடினார்கள்.

பெனால்டி அளித்த முடிவும் மிகவும் கடுமையானது. பெனால்டிக்குப் பிறகு அது நீண்டு போய் 4-1 என வந்து நின்றது. ஆனாலும் நாங்கள் சோர்வடையவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தோம். எனவேதான் குரோஷியாவில் எங்கள் அணி குறித்து எல்லோரும் மிகவும் பெருமைப்படுகிறார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com