கோலாகலமாகத் தொடங்கியது கால்பந்து திருவிழா

உலகக் கோப்பை கால்பந்து 2018 திருவிழா வியாழக்கிழமை இரவு மாஸ்கோவின் லுஷ்னிகி விளையாட்டரங்கில் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. 
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்குவதை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள். 
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்குவதை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள். 

* வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள், இசைநிகழ்ச்சிகள்
* பல்லாயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள்

உலகக் கோப்பை கால்பந்து 2018 திருவிழா வியாழக்கிழமை இரவு மாஸ்கோவின் லுஷ்னிகி விளையாட்டரங்கில் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. 
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பு ரஷியாவுக்கு கிடைத்தது. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. 
வரும் ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்காக ரஷிய அரசு ரூ.87 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. கால்பந்து ஆட்டங்களைக் காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் ரஷியாவுக்கு வருவர் என்பதால் பல்வேறு சிறப்பான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
21-வது உலகக் கோப்பை போட்டியின் தொடக்க விழா மாஸ்கோவின் பிரம்மாண்டமான லுஷ்னிகி விளையாட்டரங்கில் நடைபெற்றது. ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், பிஃபா தலைவர் கியானி இன்பேன்டினோ தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தனர். 
இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ் பெற்ற பாடகர் ராபி வில்லியம்ஸ், ரஷிய இளம் பாடகி அய்டா கலிஃபுல்லினா ஆகியோரின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ரஷிய கலாசாரம், பண்பாடு, கால்பந்து விளையாட்டின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வண்ணிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 15 நிமிடங்களில் துவக்க விழா முடிவடைந்தது.
81 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதி கொண்ட லுஷ்னிகி மைதானம் முழுவதும் நிரம்பி வழிந்தது. ரஷிய அணியின் சீருடைகளை அணி ரசிகர்கள் தங்கள் நாட்டு அணியை உற்சாகப்படுத்துவதற்காக குவிந்திருந்தனர். 
பலத்த பாதுகாப்பு 
போட்டி நடைபெறும் மைதானத்தைச் சுற்றிலும் ரஷிய பாதுகாப்புத் துறை சார்பில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மைதானம் அருகே விமான எதிர்ப்பு பீரங்கிகளும் நிறுத்தப்பட்டிருந்தது.
லுஷ்னிக் மைதானத்துக்கு ரசிகர்கள் சாரை சாரையாக வரத் தொடங்கினர். மாஸ்கோ நகரமே உலகக் கோப்பை போட்டியால் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

ரஷியா அபார வெற்றி: 

ஆட்டத்தின் முதல் கோலை அடித்த மகிழ்ச்சியில் ரஷிய வீரர்கள்.
ஆட்டத்தின் முதல் கோலை அடித்த மகிழ்ச்சியில் ரஷிய வீரர்கள்.


உலகக் கோப்பை கால்பந்து போட்டியின தொடக்க ஆட்டத்தில் ரஷிய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
சவுதி அணியில் அப்துல்லா அல் மயூப், உஸாமா ஹுசாவி, ஓமர் ஹோசாவி, யாசர் ஹல் ஷரானி, மொகமது அல் பரிக், அப்துல்லா ஓடிப், சல்மான் அல் பராஜ், யாஹியா அல் ஷிஹிரி, டைசிர், சலேம் அல் தோசரி, பஹத் அல் மொலத் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இரு அணி வீரர்களும் பந்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போராடினர். துவக்க முதலே ஆதிக்கம் செலுத்திய ரஷியாவின் யுரி கஸ்னிகி ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார்.
இதற்கிடையே ஆலன் ஸாகோவ் காயமடைந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக இடம் பெற்ற டெனிஸ் செரிஷேவ் இரண்டாவது கோலை அடித்தார். பின்னர் வந்த மற்றொரு பதிலி வீரரான அர்டெம் டையுபா தனக்கு கிடைத்த பந்தை தலையால் முட்டி மூன்றாவது கோலை அடித்தார். 
உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் அபராமாக ஆடிய ரஷிய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது.
ரஷியாவுக்காக யுரி கஸ்னிகி, டெனிஸ் செரிஷேவ் (2), அர்டெம் டையுபா, கோலோவின் ஆகியோர் கோலடித்தனர்.

5145 கி.மீ சைக்கிள் பயணம் செய்த ரசிகர்
உலகக் கால்பந்து போட்டி 2018 ஒரு பகுதியாக மாஸ்கோவில் வியாழக்கிழமை நடைபெற்ற ரஷியா-சவுதி அரேபிய அணிகளின் தொடக்க ஆட்டத்தைக் காண மொத்தம் 75 நாள்கள் 5144 கி.மீ தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சவுதி ரசிகர் பாத் அல் யாஹியா மாஸ்கோ வந்துள்ளார்.

உலகக் கோப்பையை வெல்ல ரொனால்டோவுக்கு கடைசி வாய்ப்பு
போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரஷியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியே வெல்வதற்கான கடைசி வாய்ப்பாகும். அவரது பதக்கப் பட்டியலில் உலகின் முக்கிய கோப்பைகள் அனைத்தும் இடம் பெற்றிருந்தாலும் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் இடம் பெறவில்லை.

உலகக் கோப்பைக்காக கூகுள் டூடில்
உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டியை முன்னிட்டு கூகுள் டூடில் சிறப்பு லோகோவை தனது பக்கத்தில் வைத்துள்ளது.
முக்கிய பிரமுகர்கள் பிறந்த நாள், ஆண்டு விழா முக்கிய சம்பவம் போன்றவற்றின் போது கூகுள் டூடில் சிறப்பு லோகோவை தனது முகப்பு பக்கத்தில் வைப்பது வழக்கம். வியாழக்கிழமை ரஷியாவில் தொடங்கிய உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு நாட்டின் திறமை, வெவ்வேறு வகை கலாசாரம் தொடர்பாக ஓவியர் மூலம் வரையப்பெற்ற லோகோ கூகுள் முகப்பு பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு நாளும் போட்டி முடியும் வரை அந்தந்த நாட்டில் கால்பந்து எவ்வாறு சிறப்புடன் திகழ்கிறது என சிறப்பு லோகோ முகப்பு புத்தகத்தில் வைக்கப்படும்.கூகுள் நிறுவனம் முதன் முறையாக 20.8.1998-இல் முதல் டுடிலை தனது முகப்பு பக்கத்தில் வைக்கத் தொடங்கியது.

இன்றைய ஆட்டங்கள்
15-6-2018 (வெள்ளிக்கிழமை)
எகிப்து-உருகுவே, மாலை 5.30.
மொராக்கோ-ஈரான், இரவு 8.30.
போர்ச்சுகல்-ஸ்பெயின், இரவு 11.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com