பேர்ஸ்டோவ், மணீஷ் அரைசதம் வீண்: கொல்கத்தா 10 ரன்களில் வெற்றி

பேர்ஸ்டோவ், மணீஷ் அரைசதம் வீண்: கொல்கத்தா 10 ரன்களில் வெற்றி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் 3-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.

188 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர்களாக ரித்திமான் சாஹா, கேப்டன் வார்னர் களமிறங்கினர். 

கொல்கத்தா சிறப்பான தொடக்கம்:

ஹர்பஜன் சிங் வீசிய முதல் ஓவரில் சாஹா 1 சிக்ஸர் அடித்தார். ஆனால், அடுத்த ஓவரில் பிரசித் கிருஷ்ணா பந்தில் கேப்டன் வார்னர் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷகிப் அல் ஹசன் வீசிய 3-வது ஓவரில் சாஹா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மணீஷ் பாண்டே - ஜானி பேர்ஸ்டோவ்:

அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்ததால் இந்த இணை நிதானமாக தொடங்கி பாட்னர்ஷிப் அமைத்தது. பவர் பிளே முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 35 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

பவர் பிளே முடிந்தவுடன் படிப்படியாக அதிரடிக்கு மாறி ஸ்கோரை உயர்த்தினர். இதனால் அணியின் ரன் ரேட் ஓவருக்கு 8-ஐத் தாண்டத் தொடங்கியது. வருண் சக்ரவர்த்தி பந்தில் சிக்ஸர் அடித்த பேர்ஸ்டோவ் 32-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். ஆனால், அரைசதம் அடித்த கையோடு 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, பெரிதளவில் பவுண்டரிகள் போகாததால் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 13-ஐத் தாண்டியது. கடைசி 5 ஓவர்களில் ஹைதராபாத் வெற்றிக்கு 69 ரன்கள் தேவைப்பட்டன.

பிரசித் கிருஷ்ணா வீசிய 16-வது ஓவரில் முகமது நபி 2 பவுண்டரிகள் அடித்தாலும் அதே ஓவரில் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் ஒரு சிக்ஸர் அடித்தார். ஆனால், ரஸல் வீசிய 18-வது ஓவரில் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்து விளையாடி வந்த மணீஷ் பாண்டேவும் பவுண்டரிகள் அடிக்காமல் திணறியதால் கடைசி 2 ஓவர்களில் ஹைதராபாத் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டன.

கம்மின்ஸ் வீசிய 19-வது ஓவரில் அப்துல் சமத் 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு நம்பிக்கையளித்தார். இதனால், கடைசி ஓவரில் ஹைதராபாத் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டன.

ஆனால், கடைசி ஓவரை ரஸல் சிறப்பாக வீசியதால் முதல் 5 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே ஹைதராபாத்தால் எடுக்க முடிந்தது. கடைசி பந்தில் மட்டும் மணீஷ் பாண்டே சிக்ஸர் அடித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மணீஷ் 44 பந்துகளில் 61 ரன்களும், அப்துல் சமத் 8 பந்துகளில் 19 ரன்களும் எடுத்தனர்.

கொல்கத்தா தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், ரஸல், ஷகிப், கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com