மும்பையிடம் தொடர்ந்து தோல்வியடையும் கொல்கத்தா அணி: நிலைமை மாறுமா?

ஐபிஎல் போட்டியில் வேறு எந்த அணியும் இன்னொரு அணி மீது இந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தியதில்லை. 
மும்பையிடம் தொடர்ந்து தோல்வியடையும் கொல்கத்தா அணி: நிலைமை மாறுமா?

சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

பழைய புள்ளிவிவரங்களைப் பார்த்தால் மும்பை அணிதான் இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெறும் எனக் கண்ணை மூடிக்கொண்டுச் சொல்லிவிடலாம்.

இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 27 முழுவதுமாக முடிந்த ஆட்டங்களில் 21-ல் மும்பை அணி வெற்றியடைந்துள்ளது. அதிலும் கடந்த 10 ஆட்டங்களில் 9-ல் மும்பைக்கே வெற்றி கிடைத்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் வேறு எந்த அணியும் இன்னொரு அணி மீது இந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தியதில்லை. 

தொடக்க ஆட்டத்தில் பெங்களூர் அணியிடம் தோற்ற மும்பை அணி, தனது முதல் வெற்றியை கொல்கத்தாவிடம் பெற்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றபோதும் 2-வது ஆட்டத்தில் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது கொல்கத்தா அணி. இதனால் இன்றைய ஆட்டம் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரு அணிகளும் சிக்ஸர்கள் அடிப்பதற்குப் பெயர் போனவை. 2019 ஐபிஎல் போட்டியிலிருந்து கொல்கத்தா அணி ஒரு இன்னிங்ஸுக்கு 8.2 சிக்ஸர்களும் மும்பை அணி ஒரு இன்னிங்ஸுக்கு 7.8 சிக்ஸர்களும் அடித்துள்ளன. சென்னை ஆடுகளம் அதிரடி ஆட்டத்துக்கு வழிவகுக்குமா எனத் தெரியவில்லை. எனினும் இரு அணிகளும் மோதினால் சிக்ஸர்கள் பறக்கும் என்பதால் இன்றும் வானவேடிக்கைகள் நிகழலாம். 

ஒரு வீரர் எதிரணியிடம் எடுத்த அதிகபட்ச ரன்கள் என்பது கொல்கத்தாவுக்கு எதிராக ரோஹித் சர்மா எடுத்த ரன்கள் தான். 939 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிக்குப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளார். இன்னும் 61 ரன்கள் கூடுதலாக எடுத்துவிட்டால், ஓர் அணிக்கு எதிராக 1000 ரன்கள் எடுத்த முதல் ஐபிஎல் வீரர் என்கிற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுவிடுவார். 

ஐபிஎல் 2021 போட்டியின் பரபரப்பான தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய பெங்களூா் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் அடித்து வென்றது. பெங்களூா் பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் 5 விக்கெட்டுகளை எடுத்து மும்பையைக் கட்டுப்படுத்த, அந்த அணியின் டி வில்லியா்ஸ் அதிரடியாக ஆடி வெற்றிக்கு வித்திட்டாா்.

ஐபிஎல் போட்டியின் 3-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் அடித்தது. 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 80 ரன்கள் எடுத்தார் நிதிஷ் ராணா. அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களே எடுத்தது. மணிஷ் பாண்டே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 61 ரன்கள் சோ்த்துப் போராடினாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com