ஹீரோக்களாக மாறிய மில்லர், மாரிஸ்: டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹீரோக்களாக மாறிய மில்லர், மாரிஸ்: டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்


டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் 7-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று (வியாழக்கிழமை) விளையாடின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது.

148 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக மனன் வோரா மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். டெல்லியும் ராஜஸ்தானைப் போல் பவர் பிளேவில் விக்கெட்டுகளை வீழ்த்தியது.

கிறிஸ் வோக்ஸ் 3-வது ஓவரில் வோரா (9) மற்றும் பட்லர் (2) விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானுக்கு அதிர்ச்சியளித்தார்.

இந்த சரிவிலிருந்து மீள்வதற்குள் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனையும் (4) ககிசோ ரபாடா வீசிய அடுத்த ஓவரில் இழந்தது. இதனால், ராஜஸ்தான் அணி பவர் பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்களை மட்டுமே எடுத்தது.

அனுபவ வீரராக டேவிட் மில்லர் களத்திலிருந்தாலும் அவருக்கு பாட்னர்ஷிப் தர வீரர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. ஷிவம் துபே (2) மற்றும் ரியான் பராக் (2) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால், ராஜஸ்தான் 42 ரன்களுக்குள் பாதி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. எனினும், மில்லர் சரியான பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்து, அவர்களது ஓவர்களில் பவுண்டரிகள் அடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். ராகுல் தெவாதியா பாட்னர்ஷிப்புக்கு ஒத்துழைத்தார்.

இந்த இணை 6-வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்த நிலையில் பாட்னர்ஷிப்பை பிரித்தார் ரபாடா. தெவாதியா 19 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 58 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆவேஷ் கான் வீசிய 16-வது ஓவரில் அரைசதத்தை எட்டிய மில்லர், அவரது ஓவரை குறிவைத்து பெரிய ரன்களைக் குவிக்க முயற்சித்தார். 3-வது மற்றும் 4-வது பந்துகளை சிக்ஸருக்குப் பறக்கவிட்ட மில்லர் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை சற்று குறைத்தார். ஆனால், அடுத்த பந்தையும் சிக்ஸருக்கு அனுப்ப முயன்று 62 ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தார். மில்லர் இந்த ஓவரில் அடித்த சிக்ஸரே ஆட்டத்தின் முதல் சிக்ஸர் என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 43 ரன்கள் தேவை என்ற நிலையில் கிறிஸ் மாரிஸ் மற்றும் ஜெய்தேவ் உனத்கட் களத்தில் இருந்தனர்.

17 மற்றும் 18-வது ஓவர்களில் ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே போனதால் கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டன.

19-வது ஓவரை ரபாடா வீசினார். முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பி அதிரடி காட்டினார் மாரிஸ். அடுத்த 3 பந்துகளை ரபாடா சிறப்பாக வீசினார். எனினும் 5-வது பந்தை மீண்டும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டு மிரட்டினார் மாரிஸ்.

இதனால், கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டன.

கடைசி ஓவரை டாம் கரண் வீசினார். முதல் பந்தில் மாரிஸ் 2 ரன்களையும், 2-வது பந்தில் சிக்ஸரையும் பறக்கவிட கடைசி 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. 3-வது பந்தில் ரன் ஏதும் இல்லை. 4-வது பந்தில் மாரிஸ் மீண்டும் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டு ராஜஸ்தான் வெற்றியை உறுதி செய்தார்.

19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மாரிஸ் 18 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். உனத்கட் 7 பந்துகளில் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com