தவான் மீண்டும் மிரட்டல்: பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி

தவான் மீண்டும் மிரட்டல்: பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது.

196 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் வழக்கம்போல் டெல்லிக்கு அதிரடி தொடக்கத்தையே தந்தனர். இதனால், 5 ஓவர்களில் 57 ரன்களை எட்டியது டெல்லி. பவர் பிளேவின் கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங்கை மீண்டும் பந்துவீச அழைத்தார் கேப்டன் ராகுல். இதற்குப் பலனாக 32 ரன்களுக்கு பிரித்வி ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் நிதானம் காட்ட தவான் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனால், ரன் ரேட் ஓவருக்கு 9-க்கு மேல் இருந்து வந்தது. தவான் 31-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

இந்த நிலையில் அதிரடிக்கு மாற முயன்ற ஸ்மித் 9 ரன்களுக்கு மெரேடித் வேகத்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, ஸ்மித்தைப் போல் கேப்டன் ரிஷப் பந்த் ஒத்துழைக்க தவான் வெற்றி இலக்கை நோக்கி டெல்லியை அதிரடியாக அழைத்துச் சென்றார். இதனால் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 9-க்கு கீழ் குறைந்தது.

90 ரன்களைத் தாண்டி விளையாடி வந்த தவான் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 பந்துகளில் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

கடைசி 4 ஓவர்களில் 36 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஷமி 17-வது ஓவரை வீசினார். அதில் கிடைத்த 2 ஃப்ரீ ஹிட் வாய்ப்புகளை முறையே பவுண்டரி மற்றும் சிக்ஸருக்கு அனுப்பி மிரட்டினார் மார்கஸ் ஸ்டாய்னிஸ். இதுதவிர ஒரு பவுண்டரியும் அடித்ததால் கடைசி 3 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 16 ரன்கள் என்ற எளிய நிலை உருவானது.

ஆனால், ரிச்சர்ட்ஸன் வீசிய அடுத்த ஓவரில் பந்த் 15 ரன்களுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தார். எனினும், அந்த ஓவரில் ஒரு பவுண்டரி கிடைத்ததால் கடைசி 12 பந்துகளில் டெல்லி வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரின் முதல் பந்தை மெரேடித் நோ பாலாக வீச லலித் யாதவ் பவுண்டரிக்கு விரட்டினார். 3-வது பந்தை ஸ்டாய்னிஸ் மீண்டும் பவுண்டரிக்கு விரட்டி வெற்றியை உறுதி செய்தார்.

18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்த டெல்லி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com