பவர்பிளே பகுதியில் அதிக ரன்கள் எடுக்கத் தடுமாறும் சிஎஸ்கே அணி!

ஐபிஎல் போட்டியில் பவர்பிளே பகுதியில் குறைவாக ரன்கள் எடுத்த அணிகளில் சிஎஸ்கே அணி முதலிடத்தில் உள்ளது. 
பவர்பிளே பகுதியில் அதிக ரன்கள் எடுக்கத் தடுமாறும் சிஎஸ்கே அணி!

ஐபிஎல் போட்டியில் பவர்பிளே பகுதியில் குறைவாக ரன்கள் எடுத்த அணிகளில் சிஎஸ்கே அணி முதலிடத்தில் உள்ளது. 

டி20 ஆட்டத்தில் பவர்பிளே எனப்படும் முதல் ஆறு ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்கவே எந்த அணியும் விரும்பும். வட்டத்துக்கு வெளியே இரு ஃபீல்டர்கள் மட்டுமே இருப்பதால் அந்த சமயத்தில் சிக்ஸர்கள் அடிக்க பேட்ஸ்மேன்கள் முயல்வார்கள். முதல் 6 ஓவர்களில் குறைந்தபட்சம் 40 ரன்களுக்கு மேல் எடுத்துவிட்டால் அந்த அணி பெரிய ஸ்கோரை எடுக்க வசதியாக இருக்கும். 

ஆனால் சிஎஸ்கே அணி தொடர்ந்து பவர்பிளே பகுதியில் அதிக ரன்கள் எடுக்கத் தடுமாறுகிறது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் இதுவரை விளையாடிய மூன்று ஆட்டங்களில் இரண்டில் குறைவான ரன்களை எடுத்துள்ளது சிஎஸ்கே.

ஐபிஎல் 2021 போட்டியில் சிஎஸ்கேவின் பவர்பிளே ஸ்கோர்கள்

தில்லிக்கு எதிராக - 33/2
பஞ்சாப்புக்கு எதிராக - 32/1
ராஜஸ்தானுக்கு எதிராக - 46/2

2020 ஐபிஎல் முதல் பவர்பிளே பகுதியில் குறைவாக ரன்கள் எடுத்த மூன்று அணிகள் (ரன்ரேட்)

சிஎஸ்கே - 6.98
கேகேஆர் - 7.34
ஆர்சிபி - 7.55

சிஎஸ்கேவின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெயிக்வாடும் டு பிளெசிஸ்ஸும் களமிறங்குகிறார்கள். இருவருமே ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடத் தயங்குவதால் புதிய கூட்டணியுடன் சிஎஸ்கே களமிறங்கவேண்டும் என ரசிகர்கள் விருப்பப்படுகிறார்கள். ருதுராஜுக்குப் பதிலாக உத்தப்பாவையோ அல்லது மொயீன் அலியையோ தொடக்க வீரராகத் தேர்வு செய்ய வேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது. இதுவரை விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் ருதுராஜால் அதிக ரன்கள் எடுக்க முடியவில்லை. இதனால் அடுத்த ஆட்டத்தில் இவர் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இதனால் சிஎஸ்கேவின் புதிய தொடக்கக் கூட்டணி பவர்பிளே பகுதியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com