பேர்ஸ்டோவ் அரைசதம்: ஹைதராபாத்துக்கு முதல் வெற்றி

​பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பேர்ஸ்டோவ் அரைசதம்: ஹைதராபாத்துக்கு முதல் வெற்றி


பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 
14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பஞ்சாப் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

121 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். ஓவருக்கு 6 ரன்கள் மட்டுமே தேவை என்றாலும் இருவரும் துரிதமாக ரன் சேர்க்கத் தொடங்கினர்.

இதனால், பவர் பிளே முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை எட்டியது. இதன்பிறகு, இருவரும் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

முதல் 10 ஓவர்களில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் சேர்த்தது.

இந்த நிலையில் பேபியன் அலெனை பந்துவீச அழைத்தார் பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல். அதற்குப் பலனாக வார்னர் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, பேர்ஸ்டோவ் மற்றும் கேன் வில்லியம்சன் மீண்டும் ஒரு பாட்னர்ஷிப்பை அமைத்தனர். வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 5-க்குக் கீழ் இருந்ததால், இந்த இணை நெருக்கடி இல்லாமல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

கடைசி 5 ஓவர்களில் ஹைதராபாத் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டன. அடுத்த இரண்டு ஓவர்களில் பெரிதளவில் பவுண்டரிகள் போகாததால் கடைசி 3 ஓவர்களில் 17 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

சென்னை ஆடுகளத்தில் இரண்டாவது பேட்டிங்கில் கடைசி கட்டத்தில் விக்கெட்டைப் பறிகொடுத்து தோல்வியடைவது வழக்கமாக இருப்பதால் இந்த இணை விக்கெட்டைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வந்தது.

இந்த நிலையில் தீபக் ஹூடா பந்துவீச அழைக்கப்பட்டார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பேர்ஸ்டோவ் அரைசதத்தை எட்டினார். அந்த ஓவரில் மொத்தம் 7 ரன்கள் கிடைத்ததால் கடைசி 12 பந்துகளில் ஹைதராபாத் வெற்றிக்கு 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.

அர்ஷ்தீப் வீசிய 19-வது ஓவரின் 2-வது பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிட்ட பேர்ஸ்டோவ் ஆட்டத்தில் விறுவிறுப்பைக் குறைத்தார். 

3-வது பந்தில் 2 ரன்கள், 4-வது பந்தில் 1 ரன் எடுத்தார் பேர்ஸ்டோவ். அடுத்த பந்து வைடாக வீச நடப்பு சீசனில் ஹைதராபாத் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

18.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்த ஹைதராபாத் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பேர்ஸ்டோவ் 56 பந்துகளில் 63 ரன்களும், வில்லியம்சன் 19 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com