ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுகிறார் நடராஜன்!

ஐபிஎல் போட்டியிலிருந்து நடராஜன் விலகுவது குறித்த அறிவிப்பை சன்ரைசர்ஸ் அணி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுகிறார் நடராஜன்!

ஐபிஎல் 2020 போட்டியில் அசத்தியது போல இந்த வருடப் போட்டியிலும் சிறப்பாகப் பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நடராஜன், காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றாா். அங்கு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அறிமுகமானார். பின்னா் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பினாா். இளைஞா்கள், ஊா் பொதுமக்கள் நடராஜனுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனா். இரண்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஏற்றப்பட்ட நடராஜன், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவே ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் நடராஜன் விளையாடினார். 

நடராஜனின் இந்த முன்னேற்றத்துக்குக் காரணம், கடந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசியதுதான்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன், ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்தார். எகானமி - 8.02. 

கடந்த வருடம், ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா என்கிற சந்தேகம் நடராஜன் மீது இருந்தது. காரணம், அதற்கு முன்பு இரு வருடங்களாக ஐபிஎல் போட்டியில் விளையாட நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கவில்லை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. புவனேஸ்வர் குமார், சித்தார்த் கெளல், சந்தீப் சர்மா என இவர்களையே எல்லா ஆட்டங்களிலும் தேர்வு செய்ததால் நடராஜனின் பங்களிப்பு அவசியமில்லாமல் இருந்தது. 2019-ல் முஷ்டாக் அலி டி20 போட்டியில் தமிழக அணிக்காக 11 ஆட்டங்களில் விளையாடி 13 விக்கெட்டுகள் எடுத்திருந்தார் நடராஜன். எகானமி - 5.84. இது நடராஜன் மீது புது நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஐபிஎல் போட்டியின் ஆரம்பத்திலேயே வாய்ப்பு தந்து பார்த்தது சன்ரைசர்ஸ் அணி. ஆர்சிபி அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே விராட் கோலியின் விக்கெட்டை எடுத்தார் நடராஜன். ஐபிஎல் போட்டி முழுக்க விளையாடும் வாய்ப்பு நடராஜனுக்குக் கிடைத்தது.

டி20 ஆட்டங்களில் பந்துவீச்சாளர்களின் பலமாக இருக்கும் யார்க்கர்களைத் தொடர்ந்து பயன்படுத்த தொடங்கினார். யார்க்கர் பந்துவீச்சு தானே ஐபிஎல் போட்டியில் முதலில் வாய்ப்பளித்தது, அதையே ஆயுதமாகப் பயன்படுத்துவோம் என்றெண்ணி, ஒரு முடிவுடன் பந்துவீசத் தொடங்கினார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் யார்க்கருக்கென்றே புகழ்பெற்ற பும்ரா உள்ளிட்ட பல பிரபல பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடியும் நடராஜன் அளவுக்கு வேறு யாராலும் யார்க்கரில் நிபுணத்துவம் பெற்று அதிகமுறை வீச முடியவில்லை. இதனால் நடராஜன் விளையாடுகிற ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் வீசுகிற யார்க்கர்களுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் எனப் பலரும் நடராஜனைக் கவனிக்க ஆரம்பித்து அவரைப் பற்றி சமூகவலைத்தளங்களில் எழுதினார்கள். ஐபிஎல் 2020 போட்டியில் 71 யார்க்கர் பந்துகளை வீசினார் நடராஜன். அதில் 58 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் ஒன்று, பிளேஆஃப்பில் வீழ்த்திய டி வில்லியர்ஸின் விக்கெட்.  

இந்த வருட ஐபிஎல் போட்டியில் கேகேஆர், ஆர்சிபி அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் விளையாடிய நடராஜன் 1/37, 1/32 எனப் பந்துவீசியிருந்தார். அதன்பிறகு சன்ரைசர்ஸ் விளையாடிய ஆட்டங்களில் அவர் இடம்பெறவில்லை. 

இந்நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து நடராஜன் விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியத் தொடரில் ஏற்பட்ட காயம் தற்போது மீண்டும் தொந்தரவு செய்வதால் அதற்கு சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். மேலும் ஐபிஎல் போட்டி நடைபெறும்போது ஸ்கேன் எடுக்க மருத்துவமனைக்குச் சென்றால் மீண்டும் விடுதி அறையில் ஏழு நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தச் சூழலில் ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் விலகுவதே சரியான முடிவாக இருக்கும் என அறியப்படுகிறது. இதனால் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகி பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதமிக்குச் சென்று சிகிச்சை பெறவுள்ளார் நடராஜன்.

ஐபிஎல் போட்டியிலிருந்து நடராஜன் விலகுவது குறித்த அறிவிப்பை சன்ரைசர்ஸ் அணி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடராஜனுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலையால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com