கடைசி கட்டத்தில் மாரிஸ் மிரட்டல்: 133 ரன்களுக்குக் கட்டுப்பட்டது கொல்கத்தா

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.
நிதிஷ் ராணா
நிதிஷ் ராணா


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்கள் நிதிஷ் ராணா மற்றும் ஷுப்மன் கில் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

முதல் 5 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கில் 11 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். இதனால், பவர் பிளே முடிவல் கொல்கத்தா 1 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பவர் பிளே முடிந்த சிறிது நேரத்திலேயே ராணாவும் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சுனில் நரைன் 6 ரன்களுக்கும், கேப்டன் இயான் மார்கன் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து ராகுல் திரிபாதி அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டை உயர்த்த, தினேஷ் கார்த்திக் நிதானம் காட்டினார்.

இதனால், 15 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 93 ரன்கள் சேர்த்தது.

ஆனால், கடைசி கட்ட அதிரடிக்கு களத்தில் இல்லாமல் 36 ரன்களுக்கு திரிபாதி ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல், கிறிஸ் மாரிஸ் பந்தில் 1 சிக்ஸர் மட்டுமே அடித்த நிலையில் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கார்த்திக்கும் அதே ஓவரில் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

கடைசி ஓவரின் முதல் பந்தில் பேட் கம்மின்ஸ் ஒரு சிக்ஸர் அடித்தாலும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால், கொல்கத்தாவுக்கு கடைசி கட்டத்தில் பெரிய அதிரடி கிடைக்கவில்லை. ஷிவம் மவியும் கடைசி பந்தில் 5 ரன்களுக்கு போல்டானார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் தரப்பில் மாரிஸ் 4 விக்கெட்டுகளையும், உனத்கட், முஸ்தபிஸூர் ரஹ்மான், சேத்தன் சகாரியா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com