நீங்கள் பாதுகாப்புடன் வீட்டுக்குச் செல்வது எங்கள் பொறுப்பு: வெளிநாட்டு வீரர்களுக்கு பிசிசிஐ உறுதி

நீங்கள் பாதுகாப்பாக வீட்டுக்குச் செல்லும்வரை ஐபிஎல் போட்டி நிறைவுபெறாது...
நீங்கள் பாதுகாப்புடன் வீட்டுக்குச் செல்வது எங்கள் பொறுப்பு: வெளிநாட்டு வீரர்களுக்கு பிசிசிஐ உறுதி

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்புடன் சொந்த நாட்டுக்குச் செல்வது தங்களுடைய பொறுப்பு என பிசிசிஐ உறுதியளித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாட வீரர்களிடையே தயக்கம் நிலவி வருகிறது. ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ள இரு ஆஸி வீரர்களான கேன் ரிச்சர்ட்சனும் ஆடம் ஸாம்பாவும் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்ப முடிவெடுத்துள்ளார்கள். இதனால் இருவரும் ஐபிஎல் போட்டியில் இடம்பெற மாட்டார்கள் என ஆர்சிபி அறிவித்துள்ளது. இவர்களுக்கு முன்பு ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த மற்றொரு ஆஸி. வீரர் ஆண்ட்ரூ டை, நாடு திரும்பினார். கடந்த வாரம் ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த இங்கிலாந்து வீரரான லியம் லிவிங்ஸ்டன், கரோனா பாதுகாப்பு வளையத்தால் ஏற்பட்ட சோர்வு காரணமாக சொந்த நாட்டுக்குத் திரும்பினார். 

இந்தியப் பயணிகள் விமானங்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில் தங்கள் நாட்டை தொற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ளது. மே 15 வரை இந்தத் தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப ஆஸ்திரேலிய அரசு தனி விமானம் அனுப்ப வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் கிறிஸ் லின் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்கள் மே 23 அன்று முடிகிறது. ஐபிஎல் போட்டி மே 30 அன்று நிறைவுபெறுகிறது.

இந்நிலையில் பிசிசிஐயின் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரி ஹேமங் அமின், ஐபிஎல் அணிகளுக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இந்தியாவிலும் நிலவும் சூழலால் சிலருக்குத் தயக்கங்கள் ஏற்பட்டுள்ளதை அறிகிறோம். போட்டியிலிருந்து விலக முடிவெடுத்துள்ள வீரர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறோம். அவர்களுக்கு எல்லாவிதமான ஆதரவையும் அளிப்போம். அதேசமயம் அனைவரும் கரோனா பாதுகாப்பு வளையத்தில் பத்திரமாக உள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.

ஐந்து நாள்களுக்குப் பதிலாகத் தற்போது இரு நாள்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை செய்து வருகிறோம். இதற்கு முன்பு வெளியே உள்ள ஹோட்டல்களில் இருந்து உணவுகளை கொண்டு வர அனுமதித்தோம். தற்போது அதை நிறுத்தியுள்ளோம். பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் பலப்படுத்தியுள்ளோம். 

போட்டி முடிந்தபிறகு எப்படிச் சொந்த நாட்டுக்குத் திரும்புவது எனப் பலரும் கவலை கொள்வதை நாங்கள் அறிகிறோம். இதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய இடத்துக்குப் பாதுகாப்பாகச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிசிசிஐ மேற்கொள்ளும். நீங்கள் வீட்டுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை அரசுடன் இணைந்து செய்து வருகிறோம். நீங்கள் பாதுகாப்பாக வீட்டுக்குச் செல்லும்வரை ஐபிஎல் போட்டி நிறைவுபெறாது. மக்களின் கடினமான சூழலில் இருந்து சிறிது நேரம் அவர்களைத் திசைதிருப்பினாலும் அது சிறந்த பணியே. ஆடுகளத்தில் களமிறங்கும்போது லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறீர்கள். ஒருவர் முகத்தில் ஒரு நிமிடம் மகிழ்ச்சியை உண்டாக்கினாலும் நீங்கள் நன்றாக விளையாடினீர்கள் என்று அர்த்தம். வழக்கமாக ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்காக விளையாடுவீர்கள். இம்முறை அதைவிடவும் முக்கியமான மனிதநேயத்துக்காக விளையாடுகிறீர்கள் என்று எழுதியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com