தலைநகரை அதிரவைத்த சென்னை: மும்பைக்கு 219 ரன்கள் இலக்கு

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்துள்ளது.
தலைநகரை அதிரவைத்த சென்னை: மும்பைக்கு 219 ரன்கள் இலக்கு


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்துள்ளது.

தில்லியில் நடைபெறும் இன்றைய (சனிக்கிழமை) ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தில்லி ஜேட்லி மைதானத்தில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

சென்னைக்கு வழக்கம்போல் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். டிரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார் ருதுராஜ். ஆனால், அதே ஓவரில் 4-வது பந்தில் ஹார்திக் பாண்டியாவிடம் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார்.

எனினும், டு பிளெஸ்ஸி தவல் குல்கர்னி வீசிய 2-வது ஓவரில் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்து மும்பையிடமே நெருக்கடியைத் திருப்பினார். மொயீன் அலியும் அவருடன் இணைந்து போல்ட் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் அடித்து அசத்தினார். இந்த இணையின் சிறப்பான ஆட்டத்தால் பவர் பிளேவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்தது.

நடு ஓவர்களில் இருவரும் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்தே ரன்களைக் குவித்து வந்தனர். இதனால், ரன் ரேட் ஓவருக்கு 9-ஐத் தொடத் தொடங்கியது. 

ஜேம்ஸ் நீஷம் ஓவரில் சிக்ஸர் அடித்து 1 ரன் எடுத்த மொயீன் அலி சென்னை அணிக்கான தனது முதல் அரைசத்தைப் பதிவு செய்தார். மறுமுனையில் டு பிளெஸ்ஸியும் பூம்ரா ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி விளாசி அரைசதத்தை நெருங்கினார்.

ஆனால், அதே ஓவரில் மொயீன் அலி 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 50 ரன்கள் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களில் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இணை 2-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தது.

இந்த நிலையில் 12-வது ஓவரை வீச கைரன் பொல்லார்ட் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 1 ரன் எடுத்த டு பிளெஸ்ஸி 27-வது பந்தில் அரைசத்தை எட்டினார். ஆனால், அதே ஓவரில் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே ரெய்னா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் ரன் குவிக்கும் வேகத்தைக் கட்டுப்படுத்த மும்பை முயற்சித்தது. ரவீந்திர ஜடேஜாவும் சற்று நேரம் எடுத்துக்கொண்டார்.

ஆனால், அம்பதி ராயுடு எதையும் பொருட்படுத்தாது துரிதமாக ரன் சேர்க்கத் தொடங்கினார்.

ராகுல் சஹார் ஓவரில் 1 சிக்ஸர், தவல் குல்கர்னி ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள், தொடர்ந்து பூம்ரா ஓவரில் ஒரு சிக்ஸர் என சிக்ஸர்களைப் பறக்கவிட சென்னையின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

குல்கர்னி வீசிய 16-வது ஓவரில் 17 ரன்கள், பூம்ரா வீசிய 17-வது ஓவரில் 21 ரன்கள் என ரன் கிடுகிடுவென உயர சென்னையின் ரன் ரேட் ஓவருக்கு 10-ஐத் தாண்டியது.

தொடர்ந்து, போல்ட் ஓவரில் சிக்ஸரையும், பவுண்டரியையும் விளாசிய ராயுடு 20-வது பந்திலேயே அரைசத்தை எட்டினார். அரைசதம் அடித்து அடுத்த பந்தையும் சிக்ஸருக்குப் பறக்கவிட இந்த ஓவரிலும் 20 ரன்கள் கிடைத்தன.

பூம்ரா வீசிய 19-வது ஓவரில் ஜடேஜா பவுண்டரி அடித்ததன் மூலம் சென்னை அணி 200 ரன்களைக் கடந்தது. அந்த ஓவரில் 10 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

கடைசி ஓவரை குல்கர்னி வீசினார். கடைசி 2 பந்துகளில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து இன்னிங்ஸை முடித்து வைத்தார் ராயுடு.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராயுடு 27 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும். ஜடேஜா 22 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com