ஹைதராபாத்துக்குப் புதிய கேப்டன்: சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்?

​சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டிருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்துக்குப் புதிய கேப்டன்: சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்?


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டிருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகேந்திர சிங் தோனிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸை யார் வழிநடத்தப் போகிறார் என்ற கேள்வி நீண்ட நாள்களாக ரசிகர்கள் மத்தியில் உள்ளது. 

இந்த நிலையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸின் அடுத்த கேப்டனாக கேன் வில்லியம்சன் வர வேண்டும் என்ற பேச்சுகள் எழத் தொடங்கின. இக்கட்டான நிலையில்கூட பதற்றம் கொள்ளாமல் புன்னகை முகத்துடன் நிதானம் காட்டும் தோனியைப் போல் இருப்பதாலும், நியூஸிலாந்து அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வருவதாலும் வில்லியம்சன் பெயர் இந்த இடத்தில் அடிபட்டது.

கடந்த ஐபிஎல் சீசனின் தோல்விக்குப் பிறகு, அடுத்த 10 ஆண்டுக்கான சென்னை அணியை உருவாக்க வேண்டிய கடமை இருபப்பதாகவும், ஐபிஎல் ஏலத்தைப் பொறுத்து அது முடிவு செய்யப்படும் என்று தோனி கூறியதும் வில்லியம்சன் பெயர் மீண்டும் அடிபடத் தொடங்கியது.

வில்லியம்சன் போன்ற ஒரு வீரரை எந்தவொரு அணியும் எளிதில் விடுவிக்காது என்பதால் நடைமுறையில் சிக்கல்கள் இருந்தன. இருந்தபோதிலும், ரசிகர்கள் மனதில் அந்த எண்ணம் இருந்துகொண்டே இருந்தது.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜாவும்கூட தோனிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக வில்லியம்சன் நியமிக்கப்பட வேண்டும் என இரண்டு தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால், சென்னை ரசிகர்களின் இந்தக் கனவை கலைக்கும் வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய அறிவிப்பொன்றை இன்று (சனிக்கிழமை) வெளியிட்டது. டேவிட் வார்னருக்குப் பதில் கேன் வில்லியம்சனே இனி அணியை வழிநடத்துவார் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கேன் வில்லியம்சன் அணியில் ஒரு வீரராக இருந்தபோதே ஹைதராபாத் அணி நிர்வாகம் அவரை ஏலத்தில் விடுவிக்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. 2015 முதல் ஹைதராபாத்தை வழிநடத்தி வந்த வார்னரை நீக்கிவிட்டு வில்லியம்சனுக்குப் புதிதாக கேப்டன் பொறுப்பு வழங்கப்படுகிறது என்றால் அந்த அணி நிர்வாகம் ஏதோ எதிர்காலத் திட்டத்தைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும்.

அப்படிப் பார்க்கையில் அடுத்தாண்டு ஏலத்தில் வில்லியம்சனை ஹைதராபாத் அணி நிர்வாகம் விடுவிப்பதற்கான வாய்ப்புகள் மேலும் பன்மடங்கு குறைந்துள்ளது.

இது சென்னை ரசிகர்கள் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோனி இன்னும் எத்தனை ஐபிஎல் போட்டிகளில் விளையாடப் போகிறார்? அவருக்குப் பிறகு அணியை யார் வழிநடத்துவார்? 

காலத்தின் கையில் பதில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com