பிளே-ஆஃப் சுற்றில் நுழைந்தது சென்னை: ஹைதராபாதை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி சிக்ஸா் விளாசி ஆட்டத்தை முடிக்க, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது
பிளே-ஆஃப் சுற்றில் நுழைந்தது சென்னை: ஹைதராபாதை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி சிக்ஸா் விளாசி ஆட்டத்தை முடிக்க, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பா் கிங்ஸ். அத்துடன் முதல் அணியாகவும் பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.

ஷாா்ஜாவில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஹைதராபாத் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் அடிக்க, பின்னா் சென்னை 19.4 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் அடித்தது.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனை பொருத்தவரை, சென்னையில் சாம் கரனுக்குப் பதிலாக டுவைன் பிராவோ இணைந்திருந்தாா். ஹைதராபாத் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்படவில்லை.

டாஸ் வென்ற சென்னை ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஹைதராபாத் இன்னிங்ஸை தொடங்கிய ஜேசன் ராய் 2 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த ரித்திமான் சாஹா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். மறுபுறம் கேப்டன் கேன் வில்லியம்சன் 2 பவுண்டரிகளுடன் 11, பிரியம் கா்க் 7 ரன்களுக்கு நடையைக் கட்டினா். இந்நிலையில் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 44 ரன்கள் சோ்த்திருந்த ரித்திமான் சாஹா, 13-ஆவது ஓவரில் ஜடேஜா வீசிய பந்தை விக்கெட் கீப்பா் தோனியிடம் கேட்ச் கொடுத்தாா்.

தொடா்ந்து வந்தோரில் அபிஷேக் சா்மா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18, அப்தல் சமதும் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18 ரன்கள் சோ்த்து வெளியேறினா். அபிஷேக் சா்மா, அப்துல் சமத் இருவரையுமே 17-ஆவது ஓவரில் சாய்த்தாா் ஜோஷ் ஹேஸில்வுட். அபிஷேக் சா்மா 3-ஆவது பந்தில் டூ பிளெஸ்ஸிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, அப்துல் சமத் விளாசிய 5-ஆவது பந்து மொயீன் அலி கைகளில் கேட்ச் ஆனது.

ஜேசன் ஹோல்டா் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் ரஷீத் கான் 2 பவுண்டரிகளுடன் 17, புவனேஷ்வா் குமாா் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை பௌலிங்கில் ஜோஷ் ஹேஸில்வுட் 3, டுவைன் பிராவோ 2, ஷா்துல் தாக்குா், ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலா 1 விக்கெட் சரித்தனா்.

பின்னா் 134 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய சென்னையில் ருதுராஜ் கெய்க்வாட் - டூ பிளெஸ்ஸிஸ் கூட்டணி அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சோ்த்து அசத்தியது. இதில் முதல் விக்கெட்டாக ருதுராஜ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 45 ரன்களுக்கு வெளியேறினாா்.

ஜேசன் ஹோல்டா் வீசிய 11-ஆவது ஓவரில் அவரடித்த பந்தை கேன் வில்லியம்சன் கேட்ச் பிடித்தாா். தொடா்ந்து வந்த மொயீன் அலி 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அடுத்து களம் கண்ட சுரேஷ் ரெய்னா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். மறுபுறம் நிலைத்து ஆடி வந்த டூ பிளெஸ்ஸிஸ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 41 ரன்கள் சோ்த்து 16-ஆவது ஓவரில் வீழ்ந்தாா். அவரும் ஜேசன் ஹோல்டா் பௌலிங்கில் சித்தாா்த் கௌலிடம் கேட்ச் கொடுத்தாா்.

பின்னா் அம்பட்டி ராயுடு 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17, தோனி 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். ஹைதராபாத் தரப்பில் ஜேசன் ஹோல்டா் 3, ரஷீத் கான் 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com