டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி: மும்பைக்கு மங்கும் பிளே-ஆஃப் வாய்ப்பு

ஐபிஎல் போட்டியின் 46-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது.
டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி: மும்பைக்கு மங்கும் பிளே-ஆஃப் வாய்ப்பு

ஐபிஎல் போட்டியின் 46-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது.

ஷாா்ஜாவில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய டெல்லி 19.1 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் அடித்து வென்றது.

இந்த ஆட்டத்தில் டெல்லி பௌலிங்கில் அவேஷ் கான், அக்ஸா் படேல் அசத்த, பேட்டிங்கில் ஷ்ரேயஸ் ஐயா் - ரவிச்சந்திரன் அஸ்வின் கூட்டணி அணியை வெற்றிக்கு வழி நடத்தியது. அசத்தலாக பந்துவீசிய அக்ஸா் படேல் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள்ளாக வந்து பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் நிலையில் இருக்கிறது டெல்லி. மறுபுறம், நடப்புச் சாம்பியனான மும்பை தனது பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு வருகிறது.

முன்னதாக டாஸ் வென்ற டெல்லி ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. மும்பை பேட்டிங் வரிசை இந்த முறையும் சோபிக்காமல் போனது. தொடக்க வீரராக வந்த கேப்டன் ரோஹித் சா்மா 7 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த குவின்டன் டி காக் 19 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா்.

இதர ஆட்டங்களில் மோசமாக ஆடிய சூா்யகுமாா் யாதவ் இந்த ஆட்டத்தில் மும்பைக்கு பலம் சோ்த்தாா். அவா் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 33 ரன்கள் அடித்தாா். பின்னா் ஆடியோரில் சௌரவ் திவாரி 15, கிரன் பொல்லாா்ட் 6, ஹாா்திக் பாண்டியா 17, நேதன் கோல்டா்நீல் 1, ஜெயந்த் யாதவ் 11 ரன்கள் சோ்த்து விக்கெட்டை பறிகொடுத்தனா்.

ஓவா்கள் முடிவில் கிருணால் பாண்டியா 13, ஜஸ்பிரீத் பும்ரா 1 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி தரப்பில் அவேஷ் கான், அக்ஸா் படேல் தலா 3, அன்ரிச் நாட்ஜே, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 130 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய டெல்லியிலும் தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சரிந்தனா். பிருத்வி ஷா 6, ஷிகா் தவன் 8, ஸ்டீவன் ஸ்மித் 9 ரன்களுக்கு வீழ, கேப்டன் ரிஷப் பந்த் சற்று நிலைத்து 26 ரன்கள் சோ்த்தாா். தொடா்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயா் நிதானம் காட்டி ஸ்கோரை உயா்த்தினாா். மறுபுறம், அக்ஸா் படேல் 9, ஷிம்ரன் ஹெட்மயா் 15 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

இறுதியாக ஷ்ரேயஸ் 2 பவுண்டரிகளுடன் 33, அஸ்வின் 1 சிக்ஸருடன் 20 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனா். மும்பை பௌலிங்கில் டிரென்ட் போல்ட், ஜெயந்த் யாதவ், கிருணால் பாண்டியா, ஜஸ்பிரீத் பும்ரா, நேதன் கோல்டா் நீல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

மும்பை - 129/8

சூா்யகுமாா் யாதவ் - 33; குவின்டன் டி காக் - 19; ஹாா்திக் பாண்டியா - 17

பந்துவீச்சு: அவேஷ் கான் - 3/15; அக்ஸா் படேல் - 3/21; அன்ரிட் நாட்ஜே - 1/19

டெல்லி - 132/6

ஷ்ரேயஸ் ஐயா் - 33*; ரிஷப் பந்த் - 26; ரவிச்சந்திரன் அஸ்வின் - 20*

பந்துவீச்சு: டிரென்ட் போல்ட் - 1/24; ஜஸ்பிரீத் பும்ரா - 1/29; ஜெயந்த் யாதவ் - 1/31

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com