கடைசி ஓவரில் கொல்கத்தா 'த்ரில்' வெற்றி: வெளியேறியது பெங்களூரு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் 'த்ரில்' வெற்றி பெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் 'த்ரில்' வெற்றி பெற்றது.

ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்தது.

139 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தாவுக்கு ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர்.

பவர் பிளே முடிந்த அடுத்த ஓவரிலேயே நல்ல நிலையில் உள்ள ராகுல் திரிபாதி (6) விக்கெட்டை யுஸ்வேந்திர சஹால் வீழ்த்தினார். இதன்பிறகு, வெங்கடேஷுடன் இணைந்து நிதிஷ் ராணா பாட்னர்ஷிப் அமைத்தார். 26 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்ஷல் படேல் பந்தில் ஆட்டமிழந்தார் வெங்கடேஷ்.

கடைசி 9 ஓவர்களில் கொல்கத்தா வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டன. இதனால், ஆட்டம் சமநிலையில் இருந்தது.

ஆனால், குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஷர்துல் தாக்குரை முன்கூட்டியே களமிறக்கியதைப் போல இந்த ஆட்டத்தில் சுனில் நரைன் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். இந்த நகர்வு கொல்கத்தாவுக்கு வெற்றிகரமாக அமைந்தது. வந்த வேகத்தில் முதல் 3 பந்துகளில் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ஆட்டத்தை முற்றிலும் கொல்கத்தா பக்கம் திருப்பினார் நரைன்.

நரைன் வரும் முன் 54 பந்துகளுக்கு 60 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. நரைன் களமிறங்கி 3 சிக்ஸர்கள் விளாசிய பிறகு 48 பந்துகளில் 38 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது.

எனினும், பெங்களூரு பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையுடன் தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். அடுத்த இரண்டு ஓவர்களில் பவுண்டரிகள் போகவில்லை. இந்த நெருக்கடியில் சஹால் சுழலில் விக்கெட்டைப் பறிகொடுத்தார் நிதிஷ் ராணா (23). சஹால் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

இதன் பின்னர், 17-வது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் 4 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

சிராஜ் மிரட்டல் ஓவர்:

18-வது ஓவரை வீச முகமது சிராஜை அழைத்தார் கோலி. இரண்டாவது பந்திலேயே நரைன் விக்கெட்டை வீழ்த்தினார் சிராஜ். நரைன் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். அதே ஓவரில் அனுபவ தினேஷ் கார்த்திக் விக்கெட்டையும் வீழ்த்தி சிராஜ் மிரட்டலை வெளிப்படுத்தினார்.

இந்த ஓவரில் 3 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் விழுந்ததால், கடைசி 12 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை உருவானது.

19-வது ஓவரை சிறப்பாக வீசிய ஜார்ஜ் கார்டன் 5 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

6 பந்துகள் 7 ரன்கள் தேவை:

முதல் பந்தையே சிறப்பான முறையில் பவுண்டரிக்கு விரட்டி நெருக்கடியைத் தணித்தார் ஷகிப் அல் ஹசன். இதன்பிறகு, 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் கொல்கத்தா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெளியேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com