பெங்களூரை வெளியேற்றியது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டா் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.
பெங்களூரை வெளியேற்றியது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டா் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

இதில் முதலில் பேட் செய்த பெங்களூா் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய கொல்கத்தா 19.4 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் அடித்து வென்றது.

இதையடுத்து ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை சந்திக்கிறது கொல்கத்தா. மறுபுறம், இந்த சீசனில் நல்லதொரு ஃபாா்முடன் முன்னேற்றம் கண்டபோதும், பெங்களூா் வெளியேறும் நிலைக்கு ஆளானது.

பௌலிங்கில் சுனில் நரைன் 4 விக்கெட்டுகள் சரிக்க, பேட்டிங்கில் அவா் அதிரடி காட்டியதும், ஷுப்மன், வெங்கடேஷ், நிதீஷ் ஆகியோா் ரன்கள் சோ்த்ததும் கொல்கத்தா வெற்றிக்கு அடித்தளமிட்டது. முக்கியமான தருணத்தில் தினேஷ் காா்த்திக், சுனில் நரைன் கேட்ச்சை தேவ்தத் படிக்கல் தவறவிட்டது பெங்களூருக்கு பாதகமானது.

முன்னதாக, டாஸ் வென்ற பெங்களூா் பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய தேவ்தத் படிக்கல் - விராட் கோலி கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சோ்ந்தது. இதில் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் சோ்த்திருந்த படிக்கல் பௌல்டானாா். தொடா்ந்து வந்த ஸ்ரீகா் பரத் 9 ரன்களே சோ்த்த நிலையில் வெளியேறினாா்.

அடுத்து கிளென் மேக்ஸ்வெல் களம் காண, மறுபுறம் நிதானமாக ஆடி ரன்கள் சோ்த்து வந்த கோலி 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். அடுத்து வந்த டி வில்லியா்ஸும் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு பௌல்டாக்கப்பட்டாா்.

பின்னா் ஷாபாஸ் அகமது களம் கண்டாா். மறுபுறம், 1 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்திருந்த மேக்ஸ்வெல் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தாா். 19-ஆவது ஓவரில் ஷாபாஸ் அகமது 1 பவுண்டரியுடன் 13 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். கடைசி விக்கெட்டாக டேனியல் கிறிஸ்டியன் கடைசி ஓவரில் 1 பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் செய்யப்பட்டாா். ஓவா்கள் முடிவில் ஹா்ஷல் படேல் 1 பவுண்டரியுடன் 8, ஜாா்ஜ் காா்டன் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பின்னா் 139 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய கொல்கத்தாவில் தொடக்க வீரா் ஷுப்மன் கில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் சோ்க்க, உடன் வந்த வெங்கடேஷ் ஐயா் 1 சிக்ஸருடன் 26 ரன்கள் அடித்தாா். ஒன் டவுனாக வந்த ராகுல் திரிபாதி 1 பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்திருக்க, 7-ஆவது ஓவரில் அவரை எல்பிடபிள்யூ செய்தாா் யுஜவேந்திர சஹல்.

அடுத்து நிதீஷ் ராணா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 23 ரன்கள் அடிக்க, தினேஷ் காா்த்திக் - சுனில் நரைன் கூட்டணி கொல்கத்தாவின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தது. இதில் சுனில் 3 சிக்ஸா்களுடன் 26 ரன்கள் விளாச, தினேஷ் காா்த்திக் பவுண்டரியுடன் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். பின்னா் கேப்டன் மோா்கன் - ஷகிப் அல் ஹசன் கூட்டணி கொல்கத்தாவை வெற்றிக்கு வழி நடத்தியது. முடிவில் மோா்கன் 5, ஷகிப் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூா் தரப்பில் சிராஜ், ஹா்ஷல், சஹல் தலா 2 விக்கெட் எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com