விக்கெட் எடுத்தால் கொண்டாடாமல் இருப்பது ஏன்?: வருண் சக்ரவர்த்தி பதில்

சென்னை போன்ற சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளம் எனக்குப் பொருந்தாது.
விக்கெட் எடுத்தால் கொண்டாடாமல் இருப்பது ஏன்?: வருண் சக்ரவர்த்தி பதில்

ஐபிஎல் போட்டியில் விக்கெட் எடுத்த பிறகு அதைக் கொண்டாடாமல் இருப்பது பற்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி பதில் அளித்துள்ளார்.

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி வீரர்கள் மோசமாக விளையாடித் தோற்றார்கள். கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

அபுதாபியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூா் 19 ஓவா்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 10 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் அடித்து வென்றது. வருண் சக்ரவா்த்தியும் ரஸ்ஸலும் தலா 3 விக்கெட்டுகள் எடுத்து ஆர்சிபி அணியை நிலைகுலைய வைத்தார்கள். படிக்கல் மட்டும் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரராகக் களமிறங்கிய கோலி 5 ரன்களிலும் மேக்ஸ்வெல் 10 ரன்களிலும் டி வில்லியர்ஸ் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். பின்னா் கொல்கத்தா இன்னிங்ஸில் ஷுப்மன் கில் - வெங்கடேஷ் ஐயா் ஜோடி அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. ஷுப்மன் கில் 48 ரன்களும் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் 41 ரன்களும் எடுத்தார்கள். 

சிறப்பாகப் பந்துவீசிய வருண் சக்ரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. 
நான்கு ஓவர்கள் வீசிய வருண் சக்ரவர்த்தி 13 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் 15 பந்துகளில் அவர் ரன் எதுவும் கொடுக்கவில்லை. 

இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்தில் இருந்த கொல்கத்தா, 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி அணி தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது. 

வருண் சக்ரவர்த்தி எப்போது விக்கெட் எடுத்தாலும் அதைப் பெரிதளவில் கொண்டாட்ட மாட்டார். நிதானமாக தனது அணி வீரர்களுடன் அத்தருணத்தின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வார். அவ்வளவுதான். சக வீரர் ரஸ்ஸலுடனான உரையாடலில் இதற்கான காரணத்தை வருண் சக்ரவர்த்தி கூறியதாவது:

விக்கெட் கிடைத்தவுடன் அதைக் கொண்டாடுவதால் என்னுடைய செயல்முறையிலிருந்து நான் விலகிவிடக்கூடாது. அதிகமாகக் கொண்டாடினால் அடுத்த பந்தில் என்ன செய்யவேண்டும் என்பதை மறந்து விடுவேன். எனவே தான் அதிகமாகக் கொண்டாட மாட்டேன். எனினும் பிறகு கொண்டாடி விடுவேன். சென்னை போன்ற சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளம் எனக்குப் பொருந்தாது. பேட்டிங்குக்குச் சாதகமான தட்டையான ஆடுகளமே எனக்குச் சரியாக இருக்கும். அபுதாபி மைதானத்தை மிகவும் விரும்ப ஆரம்பித்துவிட்டேன். தட்டையான ஆடுகளம் எனக்குப் பொருத்தமாக உள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com