தில்லி அணிக்கு எதிராக ராஜஸ்தான் சிறப்பான பந்துவீச்சு: 155 ரன்கள் இலக்கு

20 ஓவர்களில் தில்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.
ஷ்ரேயஸ் ஐயரை ஸ்டம்பிங் செய்த சஞ்சு சாம்சன்
ஷ்ரேயஸ் ஐயரை ஸ்டம்பிங் செய்த சஞ்சு சாம்சன்

அபுதாபியில் தில்லி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

புள்ளிகள் பட்டியலில் தில்லி அணி, 14 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் ராஜஸ்தான் அணி  8 புள்ளிகளுடன் 5-ம் இடத்திலும் உள்ளன. இன்றிரவு ஷார்ஜாவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் - பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன. 

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியில் உலகின் நெ.1 டி20 பந்துவீச்சாளரான ஷம்சியும் டேவிட் மில்லரும் இடம்பெற்றுள்ளார்கள். தில்லி அணியில் ஸ்டாய்னிஸுக்குப் பதிலாக லலித் யாதவ் இடம்பெற்றுள்ளார். 

ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் நன்கு பந்துவீசியதால் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாட முடியாமல் தில்லி வீரர்கள் தடுமாறினார்கள். ஷிகர் தவன் 8 ரன்களிலும் பிருத்வி ஷா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதனால் பவர்பிளேயில் 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் மட்டுமே எடுத்தது தில்லி. 10 ஓவர்களின் முடிவில் தில்லி அணி, 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்தது.

அதன்பிறகும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது ராஜஸ்தான். ரிஷப் பந்த் 24 பந்துகளில் 24 ரன்கள் மட்டும் எடுத்து முஸ்தாபிசுர் ரஹ்மான் பந்தில் ஆட்டமிழந்தார். 32 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்த ஷ்ரேயஸ் ஐயர், தெவாதியா பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு கடகடவென 5 பவுண்டரிகள் அடித்த ஹெட்மையர் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 121 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது தில்லி அணி. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார்த்திக் தியாகி, 4 ஓவர்களில் 1 விக்கெட் எடுத்து 40 ரன்கள் கொடுத்தார். ஷம்சி 4 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்தார். 6-ம், 7-ம் நிலை வீரர்களாக லலித் யாதவும் அக்‌ஷர் படேலும் களமிறங்கியதால் கடைசிக்கட்டங்களில் அதிக ரன்கள் எடுக்கத் தடுமாறியது தில்லி அணி.

20 ஓவர்களில் தில்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. சேதன் சகாரியாவும் முஸ்தாபிசுர் ரஹ்மானும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com