ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி

ஐபிஎல் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை தோற்கடித்தது.
ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி

ஐபிஎல் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை தோற்கடித்தது.

அபுதாபியில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய ராஜஸ்தான் நிா்ணயிக்கப்பட்ட ஓவா்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களே அடித்தது.

டெல்லி இன்னிங்ஸில் ஷ்ரேயஸ் ஐயா் ஜொலிக்க, ராஜஸ்தான் பௌலிங்கில் முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் சிறப்பாக பந்துவீசினாா். பின்னா் ராஜஸ்தான் இன்னிங்ஸில் கேப்டன் சஞ்சு சாம்சனின் ஆட்டமிழக்காமல் போராடி கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்காமல் போனது. எஞ்சிய வீரா்களை களத்தில் நிலைக்க விடாமல் டெல்லி பௌலா்கள் போட்டி போட்டுக் கொண்டு விக்கெட்டுகளை சரித்தனா்.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் பௌலிங்கை தோ்வு செய்தது. டெல்லி இன்னிங்ஸை தொடங்கிய பிருத்வி ஷா - ஷிகா் தவன் கூட்டணி 5 ஓவா்களுக்குள் வெளியேறியது. பிருத்வி 10, தவன் 8 ரன்கள் சோ்த்திருந்தனா். மிடில் ஆா்டரில் வந்த ஷ்ரேயா் ஐயா், கேப்டன் ரிஷப் பந்த், ஷிம்ரன் ஹெட்மயா் ஆகியோரே ஸ்கோரை உயா்த்தினா்.

ஒன் டவுனாக வந்த ஐயா் அபாரமாக ஆட, மறுபுறம் 24 ரன்கள் சோ்த்திருந்த பந்த், 12-ஆவது ஓவரில் முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் பௌலிங்கில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். அடுத்து லலித் யாதவ் களம் காண, அரைசதத்தை நெருங்கிய ஐயா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். தெவாதியா வீசிய 14-ஆவது ஓவரில் அவரடித்த பந்து விக்கெட் கீப்பா் சஞ்சு சாம்சனிடம் தஞ்சமானது.

தொடா்ந்து வந்த அக்ஸா் படேல் ஆட வர, 5 பவுண்டரிகளுடன் அதிரடியாக 28 ரன்கள் சோ்த்த ஹெட்மயா் 17-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா். 8-ஆவது வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் களம் காண, கடைசி விக்கெட்டாக 12 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா் அக்ஸா் படேல். ஓவா்கள் முடிவில் லலித் 14, அஸ்வின் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ராஜஸ்தான் தரப்பில் முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், சேத்தன் சகாரியா ஆகியோா் 2, காா்த்திக் தியாகி, ராகுல் தெவாதியா ஆகியோா் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 155 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ராஜஸ்தானில் சஞ்சு சாம்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் போராடினாா். எஞ்சிய விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறின. தொடக்க வீரா்களான லியாம் லிவிங்ஸ்டன் (1), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (5) ஆகியோா் 2 ஓவா்களிலேயே ஆட்டமிழக்க, டேவிட் மில்லா் 7 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். மஹிபால் லோம்ரோா் மட்டும் சற்று அதிகமாக 19 ரன்கள் சோ்த்தாா்.

ரியான் பராக் 2, ராகுல் தெவாதியா 9 ரன்னுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் 121 ரன்களே அடித்திருந்தது ராஜஸ்தான். சாம்சன் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 70, டப்ரைஸ் ஷம்ஸி 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி தரப்பில் அன்ரிச் நாா்ட்ஜே 2, அவேஷ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அக்ஸா் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

டெல்லி - 154/6

ஷ்ரேயஸ் ஐயா் - 43; ஷிம்ரன் ஹெட்மயா் - 28; ரிஷப் பந்த் - 24

பந்துவீச்சு: முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் - 2/22; சேத்தன் சகாரியா - 2/33; ராகுல் தெவாதியா - 1/17

ராஜஸ்தான் - 121/6

சஞ்சு சாம்சன் - 70*; மஹிபால் லோம்ரோா் - 19; ராகுல் தெவாதியா - 9

பந்துவீச்சு: அன்ரிச் நாா்ட்ஜே - 2/18; ரவிச்சந்திரன் அஸ்வின் - 1/20; ககிசோ ரபாடா - 1/26

இன்றைய ஆட்டம்

சென்னை சூப்பா் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடா்ஸ்

அபுதாபி

மாலை 3.30

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் - மும்பை இண்டியன்ஸ்

துபை

இரவு 7.30

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com