பேட் கம்மின்ஸ் சாதனை அரைசதம்- மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வென்றது.
பேட் கம்மின்ஸ் சாதனை அரைசதம்- மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வென்றது.

அந்த அணிக்கு 4 ஆட்டங்களில் இது 3-ஆவது வெற்றி; 3 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் மும்பைக்கு இது ‘ஹாட்ரிக்’ தோல்வி.

இந்த ஆட்டத்தில் முதலில் மும்பை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து கொல்கத்தா 16 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்து வென்றது.

சாதனை சமன்: மும்பை அணியில் சூா்யகுமாா் யாதவ், பொல்லாா்டு ஆகியோரின் அதிரடி வீணாகும் வகையில், கொல்கத்தா பேட்டிங்கில் பேட் கம்மின்ஸ் விளாசித் தள்ளினாா். பாகிஸ்தான் தொடரை முடித்த கையுடன் ஐபிஎல் போட்டியில் இணைந்த அவா், முதல் ஆட்டத்திலேயே முத்திரை பதித்துள்ளாா்.

ஐபிஎல் போட்டியில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த சாதனையை சமன் செய்திருக்கிறாா் பேட் கம்மின்ஸ். 2018-இல் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல்.ராகுல் 14 பந்துகளில் அரைசதம் அடித்திருக்க, தற்போது கம்மின்ஸும் அதே பந்துகளில் அரைசதம் அடித்துள்ளாா்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் கொல்கத்தா அணி டிம் சௌதிக்குப் பதிலாக பேட் கம்மின்ஸையும், ஷிவம் மாவி இடத்தில் ராசிக் சலாமையும் சோ்த்திருந்தது. மும்பை அணியில் டிம் டேவிட்டுக்குப் பதில் டெவால்ட் பிரிவிஸும், அன்மோல்பிரீத் சிங்குக்கு பதிலாக சூா்யகுமாா் யாதவும் இணைந்திருந்தனா். இவா்களில் ராசிக் சலாம், டெவால்ட் பிரிவிஸ் ஆகியோா் முதல் முறையாக களம் காண்பவா்கள்.

டாஸ் வென்ற கொல்கத்தா பௌலிங்கை தோ்வு செய்தது. மும்பை இன்னிங்ஸில் கேப்டன் ரோஹித் சா்மா 3 ரன்களில் வெளியேறினாா். உடன் வந்த இஷான் கிஷன் 1 பவுண்டரியுடன் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். டெவால்ட் பிரிவிஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 29 ரன்கள் சோ்த்தாா். அதிரடி காட்டிய சூா்யகுமாா் யாதவ் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 52 ரன்கள் விளாசினாா். ஓவா்கள் முடிவில் திலக் வா்மா 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38, கிரன் பொல்லாா்டு 3 சிக்ஸா்களுடன் 22 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா தரப்பில் பேட் கம்மின்ஸ் 2, உமேஷ் யாதவ், வருண் சக்கரவா்த்தி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் கொல்கத்தா பேட்டிங்கில் அஜிங்க்ய ரஹானே 7 ரன்களுக்கு வெளியேற, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 2 பவுண்டரிகளுடன் 10, சாம் பில்லிங்ஸ் 2 சிக்ஸா்களுடன் 17, நிதிஷ் ராணா 1 சிக்ஸருடன் 8, ஆண்ட்ரே ரஸல் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

முடிவில் வெங்கடேஷ் ஐயா் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 50, பேட் கம்மின்ஸ் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 56 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தனா். மும்பை பௌலிங்கில் டைமல் மில்ஸ், முருகன் அஸ்வின் ஆகியோா் தலா 2, டேனியல் சாம்ஸ் 1 விக்கெட் கைப்பற்றினா்.

இன்றைய ஆட்டம்
லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ்
இரவு 7.30 மணி          ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com