கே.எல். ராகுல் அபார சதம்: மும்பை அணிக்கு 200 ரன்கள் இலக்கு
By DIN | Published On : 16th April 2022 05:35 PM | Last Updated : 16th April 2022 05:40 PM | அ+அ அ- |

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக லக்னெள அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பையில் மும்பை இந்தியன்ஸ் - லக்னெள சூப்பர் ஜயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
லக்னெள அணியின் குயிண்டன் டி காக் 13 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்தார். இதனால் முதல் 6 ஓவர்களில் லக்னெள, 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது. 10 ஓவர்களில் ஸ்கோர் 94 ஆக உயர்ந்தது. மில்ஸ் வீசிய 13-வது ஓவரில் ராகுல், மனிஷ் பாண்டே தலா 2 பவுண்டரிகளை அடித்தார்கள். பாண்டே, 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 33 பந்துகளில் அரை சதமெடுத்த ராகுல், அதன்பிறகு அதிரடியாக விளையாடினார். ஆலன் வீசிய 15-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரின் முடிவில் லக்னெள அணி 150 ரன்களை எட்டியது.
கடைசி ஐந்து ஓவர்களில் உனாட்கட்டும் பும்ராவும் நன்றாகப் பந்துவீசி ரன்கள் குவிக்கும் வேகத்தைக் கட்டுப்படுத்தினார்கள். எனினும் மில்ஸ் வீசிய 19-வது ஓவரில் 22 ரன்கள் கிடைத்தன. ராகுல், 56 பந்துகளில் சதமடித்து அசத்தினார். தீபக் ஹூடா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி ஓவரை வீசிய உனாட்கட் நான்கு ரன்கள் மட்டுமே கொடுத்து ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டாமல் பார்த்துக்கொண்டார்.
லக்னெள அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. ராகுல் 60 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.