பேர்ஸ்டோ அரை சதம்: ராஜஸ்தான் அணிக்கு 190 ரன்கள் இலக்கு
By DIN | Published On : 07th May 2022 05:48 PM | Last Updated : 07th May 2022 05:48 PM | அ+அ அ- |

சஹால்
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.
10 ஆட்டங்களில் 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது ராஜஸ்தான் அணி. பஞ்சாப் அணி 10 ஆட்டங்களில் 10 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது.
மாலையில் தொடங்கும் ஆட்டமென்பதால் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் தமிழக வீரர் ஷாருக் கானுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்கவில்லை. ராஜஸ்தான் அணியில் கருண் நாயருக்குப் பதிலாக யாஷஸ்வி ஜெயில்வால் தேர்வாகியுள்ளார்.
பஞ்சாப் வீரர் பேர்ஸ்டோ இன்று சிறப்பாக விளையாடி அரை சதமெடுத்தார். 40 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து, 15-வது ஓவரில் சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பனுகா 18 பந்துகளில் 27 ரன்களும் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா, 18 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 38 ரன்களும் எடுத்தார்கள். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. சஹால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஐபிஎல் 2022 போட்டியில் 22 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்.